ADDED : மே 24, 2024 10:15 PM

தங்கவயல்,தங்கவயலில் ஆதரவற்ற மாடு, கோசாலையில் சேர்க்கப்பட்டது.
தங்கவயலில் ஆதரவற்ற மாடுகள் சாலைகள், ரயில் நிலையங்கள், மருத்துவமனை, பூங்காக்கள், மைதானங்கள் உட்பட பல இடங்களில் இரவு நேரங்களில் காணப்படுகின்றன. மாடுகளின் உரிமையாளர் பராமரிக்க தவறுவதால், கண்ட, கண்ட இடங்களில் மேய்கின்றன.
சில மாடுகள், சாலைகளில் கேட்பாரற்று திரிவதால் விபத்துகளும் ஏற்படுகின்றன. சில மாடுகள் ரயிலில் சிக்கி பலியாவதும் உண்டு.
இதுபோன்று காணப்பட்ட ஒரு மாட்டை, சாமிநாதபுரம் பகுதியில் மர்ம நபர்கள் கட்டிப்போட்டுள்ளனர். மூன்று நாட்களாக மாட்டுக்கு தண்ணீர், தீவனம் இல்லாமல் சோர்ந்து காணப்பட்டது. இந்த தகவல் 'வாய்ஸ் பார் வாய்ஸ்லஸ்' என்ற அமைப்பை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கு தெரிய வந்தது. சம்பவ இடத்திற்கு சென்று, அந்த மாட்டுக்கு தண்ணீர் கொடுத்தார்.
இது குறித்து ராபர்ட்சன்பேட்டை போலீஸ் நிலையத்தில் தெரிவித்தார். போலீசார் ஒப்புதலுடன் பாரண்டஹள்ளி அருகே உள்ள காத்ரி கோசாலையில் மாடு ஒப்படைக்கப்பட்டது.
“மாட்டின் உரிமையாளர், போலீசில் ஆதாரத்தை காண்பித்து தடையில்லா சான்று பெற்று, கோசாலையில் இருந்து மீட்டுச் செல்லலாம்,” என, அவர் தெரிவித்தார்.

