கூடுதல் கலெக்டர் தற்கொலை வழக்கு; மார்க்சிஸ்ட் பிரமுகர் திவ்யாவுக்கு ஜாமின்
கூடுதல் கலெக்டர் தற்கொலை வழக்கு; மார்க்சிஸ்ட் பிரமுகர் திவ்யாவுக்கு ஜாமின்
ADDED : நவ 09, 2024 09:03 AM

கண்ணுார் ; கேரளாவில், கண்ணுார் மாவட்ட கூடுதல் கலெக்டர் நவீன் பாபுவை தற்கொலைக்கு துாண்டியதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் கைதான மார்க்சிஸ்ட் கம்யூ., பிரமுகர் திவ்யாவுக்கு, நேற்று நிபந்தனை ஜாமின் அளித்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
பிரிவு உபசார விழா
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
இங்குள்ள கண்ணுார் மாவட்டத்தில் கூடுதல் கலெக்டராக பணியாற்றிய நவீன் பாபு, வேறு மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவரது பிரிவு உபசார விழா, கடந்த அக்டோபர் 14ம் தேதி கண்ணுார் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
அந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்படாத போதும், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் மாவட்ட கமிட்டி உறுப்பினர் திவ்யா அதில் பங்கேற்றார்.
விழாவில் அவர் பேசும்போது, செங்கலை என்ற இடத்தில் பெட்ரோல் பங்க் அமைப்பதற்கான அனுமதி வழங்க, கூடுதல் கலெக்டர் நவீன் வேண்டுமென்றே பல மாதங்கள் இழுத்தடித்ததாக விமர்சித்தார்.
எதிர்பார்க்கவில்லை
இந்த சம்பவம் நடந்த அன்று நவீன் பாபு, தன் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்து இறந்ததாக பிரேத பரிசோதனை முடிவில் தெரியவந்தது.
இதை தொடர்ந்து, நவீன் பாபுவை தற்கொலைக்கு துாண்டியதாக திவ்யாவை போலீசார் கைது செய்தனர்.
ஜாமின் கோரி தலசேரி நீதிமன்றத்தில் திவ்யா மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த மாவட்ட தலைமை நீதிபதி கே.டி.நிசார் அகமது, திவ்யாவுக்கு நிபந்தனை ஜாமின் அளித்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவில், 'திவ்யா, கண்ணுார் மாவட்டத்தை விட்டு எங்கும் செல்லக்கூடாது; வழக்கு தொடர்பான சாட்சியங்களை கலைக்கக் கூடாது; விசாரணை நடத்தும் அதிகாரி முன் வரும் 11ம் தேதி ஆஜராக வேண்டும்' என, குறிப்பிடப்பட்டிருந்தது.
திவ்யாவுக்கு ஜாமின் வழங்கப்பட்டதற்கு ஆளுங்கட்சியினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். எனினும், நவீன் பாபுவின் மனைவி மஞ்சுஷா கூறுகையில், “திவ்யாவுக்கு ஜாமின் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. எங்களின் சட்டப் போராட்டம் நீடிக்கும்,” என்றார்.