ADDED : ஜூன் 07, 2025 09:39 PM
புதுடில்லி:டில்லி மாநகர் முழுதும் பொதுப்பணித்துறை வடிகால்களில் தூர்வாரும் பணிகளை, மூன்றாவது தரப்பு ஆய்வு செய்கிறது.
இதுகுறித்து, பொதுப்பணித் துறை வெளியிட்டுள்ள அறிக்கை:
டில்லி மாநகர் முழுதும் பொதுப்பணித்துறை வடிகால்களில் தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது. பருவமழை துவங்குவதற்கு முன் இந்தப் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், தூர்வாரும் பணிகளை மூன்றாவது தரப்பாக ஆய்வு செய்ய, தலைமை பொறியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொதுப்பணித்துறை மற்றும் பிற துறைகளின் தூர்வாரும் பணிகள் கடந்த காலங்களில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு டில்லி உயர்நீதிமன்றம், வடிகால் தூர்வாரும் பணிகளை முடிப்பதற்கான காலக்கெடு குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய தலைமைச் செயலருக்கு உத்தரவிட்டு இருந்தது.
அப்போது, ஆம் ஆத்மி ஆட்சியில், நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த சவுரவ் பரத்வாஜ், தூர்வாரும் பணிகளை மூன்றாம் தரப்பு தணிக்கை செய்ய தலைமைச் செயலரிடம் கேட்டுக் கொண்டார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மாத துவக்கத்தில், பொதுப்பணித்துறை அமைச்சர் பர்வேஷ் வர்மா, 'டில்லி முழுதும் 35 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, வடிகால்வாய்களில் தூர்வாரும் பணிகள் நடக்கின்றன. கடந்த, இரண்டாம் தேதி வரை, பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள மழைநீர் வடிகால்களில் தூர்வாரும் பணிகள் 35 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகள் வரும் 15ம் தேதிக்குள் முடிக்கப்படும்'என கூறியிருந்தார்.