அதிக வயதான ஓய்வூதியர்களுக்கு கூடுதல் பென்ஷன்: மத்திய அரசு
அதிக வயதான ஓய்வூதியர்களுக்கு கூடுதல் பென்ஷன்: மத்திய அரசு
ADDED : மார் 19, 2025 11:26 PM

புதுடில்லி:மிக அதிக வயதான ஓய்வூதியதாரர்களுக்கு உடல்நிலையை கருத்தில் வைத்து, கூடுதல் ஓய்வூதியம் வழங்கப்படும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, லோக்சபாவில் எழுத்துப்பூர்வமான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாவது:
ஆறாவது மத்திய சம்பளக் கமிஷன் ஒப்புதலின்படி, 80 வயதைக் கடந்த ஓய்வூதியதாரர்களுக்கு 20 சதவீதம், 85 வயதைக் கடந்த ஓய்வூதியதாரர்களுக்கு 30 சதவீதம், 90 வயதைக் கடந்த ஓய்வூதியதாரர்களுக்கு 40 சதவீதம், 100 வயதை எட்டும் ஓய்வூதியதாரர்களுக்கு 100 சதவீதம் என்ற அடிப்படையில் கூடுதல் ஓய்வூதியம் வழங்கப்படும்.
ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் அனைவருக்கும் இது பொருந்தும். இந்த வயதை எட்டியதும், தானாகவே, கூடுதல் பென்சனை வங்கிகள் வழங்கத் துவங்கி விடும்.
வயது கூடும்போது, அவர்களின் உடல்நிலையை கருத்தில் வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவுரைகளை, சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் வங்கிகளுக்கு அவ்வப்போது அரசு வழங்கி வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.