சபரிமலைக்கு டிராக்டரில் பயணம் செய்த ஏ.டி.ஜி.பி., கலால் துறைக்கு மாற்றம்
சபரிமலைக்கு டிராக்டரில் பயணம் செய்த ஏ.டி.ஜி.பி., கலால் துறைக்கு மாற்றம்
ADDED : ஜூலை 30, 2025 12:46 AM

திருவனந்தபுரம்; சபரிமலைக்கு டிராக்டரில் பயணம் செய்த போலீஸ் ஏ.டி.ஜி.பி., அஜித்குமாரை கலால் துறைக்கு மாற்றி அம்மாநில அரசு உத்தரவிட்டது.
கேரளா மாநில போலீஸ் ஆயுதப்படை பட்டாலியன் ஏ.டி.ஜி.பி.,யாக இருந்தவர் அஜித்குமார். இரு வாரங்களுக்கு முன்பு சபரிமலையில் நவக்கிரக கோயில் கும்பாபிஷேகம் நடந்த போது இவர் சபரிமலை வந்தார். பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கும், சன்னிதானத்தில் இருந்து திரும்ப பம்பைக்கும் இவர் டிராக்டரில் பயணம் செய்தது தெரிய வந்தது. பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு பொருட்கள் கொண்டு செல்வதற்காக மட்டுமே டிராக்டர்கள் பயன்படுத்தப்படுகிறது. இதில் டிரைவரை தவிர வேறு எவரும் பயணம் செய்யக்கூடாது என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதை மீறி ஏ.டி.ஜி.பி., டிராக்டரில் பயணம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சபரிமலை சிறப்பு ஆணையர் ஜெயகிருஷ்ணன் உயர் நீதிமன்றத்தில் ஒரு அறிக்கை தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த நீதிமன்றம் ஏ.டி.ஜி.பி., அஜித்குமார் மீது நடவடிக்கை எடுக்க டி.ஜி.பி., க்கு உத்தரவிட்டது.
உயர்நீதிமன்ற தடையை மீறி அஜித்குமார் டிராக்டரில் பயணம் செய்தது தவறானது என சுட்டிக்காட்டிய டி.ஜி.பி., ரவடா சந்திரசேகர் கேரள அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தார்.
அதை ஏற்ற அரசு நேற்று அஜித்குமாரை கலால்துறை ஆணையராக மாற்றி உத்தரவிட்டது. இவர் மீது ஏற்கனவே வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், திருச்சூர் பூரம் விழாவில் பிரச்னை ஏற்பட காரணமாக இருந்ததாகவும் புகார் நிலுவையில் இருந்து வருகிறது.