ஆம் ஆத்மி வாக்காளர்களை நீக்க முயற்சி மத்திய அரசு மீது ஆதிஷி குற்றச்சாட்டு
ஆம் ஆத்மி வாக்காளர்களை நீக்க முயற்சி மத்திய அரசு மீது ஆதிஷி குற்றச்சாட்டு
ADDED : நவ 26, 2024 08:39 PM

புதுடில்லி:“இரு மாதங்களில் டில்லி சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், வாக்காளர் பட்டியலில் இருந்து ஆம் ஆத்மி ஆதரவாளர்களை நீக்க மத்திய பா.ஜ., அரசு முயற்சிக்கிறது,” என, முதல்வர் ஆதிஷி சிங் கூறினார்.
டில்லி முதல்வர் ஆதிஷி சிங், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
டில்லி சட்டசபைத் தேர்தல் இன்னும் இரு மாதங்களில் நடக்கவுள்ளது. டில்லியில் வெற்றி பெற முடியாது என பா.ஜ., நம்புகிறது. இதனால், ஆம் ஆத்மிக்கு இடையூறு விளைவிக்கும் வேலைகளை மத்திய பா.ஜ., அரசு செய்து வருகிறது.
நியாயமற்ற முறையில் வெற்றி பெற திட்டமிட்டுள்ள பா.ஜ., வாக்காளர் பட்டியலில் இருந்து ஆம் ஆத்மி ஆதரவாளர்களை நீக்க முயற்சி செய்கிறது.
இதற்காகவேதான் 29 துணை- கலெக்டர்களை இடமாற்றம் செய்து கடந்த மாத இறுதியில் துணைநிலை கவர்னர் சக்சேனா உத்தரவிட்டார்.
மேலும், 7 சட்டசபை தொகுதிகளின் கண்காணிப்பாளர்களுக்கு தலா 20,000 வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுபோன்ற செயல்களை பூத் அளவிலான அலுவலர்கள் உடனடியாக எனக்கு தெரியப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வரும் பிப்ரவரி மாதம் டில்லி சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது. ஆம் ஆத்மி கட்சி 2015 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் அமோக வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சி செய்து வருகிறது. மூன்றாவது முறையாகவும் ஆட்சியை தக்கவைக்க தீவிர பிரசாரம் செய்து வருகிறது.
மத்தியில் ஆளும் பா.ஜ., தலைநகர் டில்லியைக் கைப்பற்ற பல்வேறு அறிவிப்புகளுடன் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளது.
ஆம் ஆத்மியின் மூத்த தலைவர்களையும் தங்கள் கட்சிக்கு இழுக்கும் பணியிலும் பா.ஜ., மும்முரமாக ஈடுபட்டுள்ளது.