ADDED : செப் 22, 2024 01:17 AM

புதுடில்லி: மதுபான கொள்கை முறைகேடு புகாரில், டில்லி முதல்வராக இருந்த ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.
அவருக்கு உச்ச நீதிமன்றம் சமீபத்தில் ஜாமின் வழங்கினாலும், 'முதல்வர் அலுவலகத்திற்கு செல்லக்கூடாது; கோப்புகளில் கையெழுத்திடக் கூடாது' என்பது உட்பட பல நிபந்தனைகளை விதித்தது.
அதனால், தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து நடந்த ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், புதிய முதல்வராக ஆதிஷி, 43, தேர்வு செய்யப்பட்டார். உடன், துணைநிலை கவர்னர் சக்சேனாவை சந்தித்து ஆட்சி அமைக்க அவர் உரிமை கோரினார்.
டில்லியின் எட்டாவது முதல்வராக ஆதிஷி நேற்று பதவியேற்றார். கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், அவருக்கு கவர்னர் சக்சேனா பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.
ஆதிஷியை தொடர்ந்து, சவுரப் பரத்வாஜ், கோபால் ராய், இம்ரான் ஹூசைன், முகேஷ் அஹ்லாவாத், கைலாஷ் கெலாட் ஆகிய ஐந்து பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
பா.ஜ.,வின் சுஷ்மா சுவராஜ், காங்கிரசின் ஷீலா தீட்சித்திற்கு பின், டில்லி முதல்வராக பதவியேற்ற மூன்றாவது பெண் என்ற பெருமையை ஆதிஷி பெற்றுள்ளார். டில்லியின் இளம் வயது முதல்வர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது.