குடிநீர் தட்டுப்பாடு குறித்து பேச முதல்வருக்கு ஆதிஷி சிங் கடிதம்
குடிநீர் தட்டுப்பாடு குறித்து பேச முதல்வருக்கு ஆதிஷி சிங் கடிதம்
ADDED : மே 24, 2025 08:33 PM
புதுடில்லி:“தலைநகர் டில்லியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து விவாதிக்க நேரம் ஒதுக்க வேண்டும்,”என, முதல்வர் ரேகா குப்தாவுக்கு, எதிர்க்கட்சித் தலைவர் ஆதிஷி சிங் கடிதம் அனுப்பியுள்ளார்.
முதல்வர் ரேகா குப்தாவுக்கு, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிஷி சிங் அனுப்பியுள்ள கடிதம்:
தலைநகர் டில்லியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் தண்ணீர் டேங்கர்கள் முன், வரிசையில் நின்று பாட்டிலில் தண்ணீர் பிடித்துச் செல்கின்றனர்.
அதேபோல, பெண்கள் வாளிகளுடன் வரிசையில் நிற்பதும், குழந்தைகள் பானைகளுடன் காத்திருக்கும் காட்சிகள் டில்லியின் புதிய அடையாளமாக மாறி வருகிறது.
தேர்தல் நேரத்தில் மக்களுக்கு பா.ஜ., வாக்குறுதியில் கூறியிருந்த தொலைநோக்குப் பார்வை இதுதானா?
முந்தைய ஆம் ஆத்மி ஆட்சியில் 24 மணி நேரமும் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. ஆனால், பா.ஜ., பொறுப்பேற்றவுடன் அதை நிறுத்தி விட்டது.
மத்திய அரசு, டில்லி அரசு, பா.ஜ., ஆதரவு துணைநிலை கவர்னர் மற்றும் டில்லி மாநகராட்சி என நான்கு இயந்திர அரசால் டில்லி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை.
வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், வரும் வாரங்களில் தண்ணீரின் தேவை மேலும் அதிகரிக்கும். மே மாதத்திலேயே நிலைமை இப்படி இருந்தால், வெப்பநிலை உச்சத்தை அடையும்போது தண்ணீருக்காக மக்கள் கடவுளிடம் தான் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
அதைத் தான் இந்த அரசு விரும்புகிறதா? இந்த ஒரு பிரச்னையே பா.ஜ., அரசின் நிர்வாகத் தோல்விக்கு சான்றாக அமைந்துள்ளது. மக்கள் நலனில் அரசுக்கு அக்கறை இல்லை.
ஜனநாயக விதிமுறைகளை மதித்து, ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.,க்கள் சந்தித்து டில்லி மக்களின் கோரிக்கைகள் குறித்து பேச முதல்வர் நேரம் ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.