ADDED : செப் 21, 2024 02:38 AM

புதுடில்லி: டில்லி ஆம் ஆத்மி கட்சி புதிய முதல்வராக ஆதிஷி இன்று பதவியேற்க உள்ளார்.
இக்கட்சி முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால், மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பான சி.பி.ஐ., வழக்கில், கடந்த 15ல், உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை அடுத்து, சிறையில் இருந்து வெளியே வந்தார். எனினும், முதல்வர் அலுவலகத்துக்கு செல்லக்கூடாது போன்ற பல்வேறு நிபந்தனைகளால் அவர் அதிருப்தி அடைந்தார்.
இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டத்தை கூட்டி முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
அதன்படி ராஜினாமா செய்து டில்லி துணைநிலை கவர்னர் சக்சேனாவை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
அப்போது அவருடன் சென்ற ஆதிஷி, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு கடிதத்தை, துணைநிலை கவர்னர் சக்சேனாவிடம் அளித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
இதையடுத்து டில்லி புதிய முதல்வராக ஆதிஷி பதவியேற்கிறார். அவருடன் சில அமைச்சர்களும் பதவியேற்கின்றனர். அவர்களுக்கு துணை நிலை கவர்னர் சக்சேனா பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.