ADDED : பிப் 13, 2025 10:00 PM

பெரோஸ்ஷா சாலை:“ஆட்சி வரும், போகும், ஆனால் நட்புகள் நீடிக்கும்,” என, ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்த பிறகு உத்தவ் தாக்கரே சிவசேனா தலைவர் ஆதித்யா தாக்கரே கூறினார்.
நடந்து முடிந்த டில்லி சட்டசபைத் தேர்தலில் தோல்வி அடைந்த ஆம் ஆத்மி, ஆட்சியை பா.ஜ.,விடம் இழந்துள்ளது. தொடர்ந்து மூன்று தேர்தல்களில் காங்கிரஸ், ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.
தேசிய அளவில் உருவாக்கப்பட்ட 'இண்டியா' கூட்டணி கட்சிகள், டில்லி தேர்தலில் ஒற்றுமையாக இல்லை என்பதால் பா.ஜ., வெற்றி பெற நேரிட்டதாக கூட்டணித் தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவாலை நேற்று அவரது இல்லத்தில் உத்தவ் தாக்கரே சிவசேனா தலைவர் ஆதித்யா தாக்கரே சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது, சிவசேனா தலைவர்கள் சஞ்சய் ராவத், பிரியங்கா சதுர்வேதி உள்ளிட்டோரும் இருந்தனர்.
டில்லி சட்டசபைத் தேர்தல், 'இண்டியா' கூட்டணியின் எதிர்காலம் ஆகியவை குறித்து இருகட்சித் தலைவர்களும் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது.
இந்த சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் ஆதித்யா தாக்கரே கூறியதாவது:
ஆட்சி, வரும், போகும். ஆனால் நட்பு தொடரும். இது நட்புரீதியிலான சந்திப்பு. இருப்பினும், நம் ஜனநாயகம் சுதந்திரமாகவும் நியாயமாகவும் இல்லை. தேர்தல்கள் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடக்கவில்லை.
மகாராஷ்டிரா, ஹரியானா, ஒடிசா, டில்லி உள்ளிட்ட பல மாநிலங்களின் வாக்காளர் பட்டியலில் பெரிய அளவிலான மோசடி நடந்துள்ளது. இதைத்தடுக்க தேர்தல் கமிஷன் தவறிவிட்டது.
மக்களின் ஓட்டுப்போடும் உரிமையை தேர்தல் கமிஷன் பறித்துவிட்டது. இந்தப் பிரச்னையைப் பற்றி விவாதிக்கக்கூட அது தயாராக இல்லை. இந்த விவகாரம் எதிர்க்கட்சிகளால் முறையாக எழுப்பப்படும்.
சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள், நாட்டிற்கு அவசியமானவை.
இவ்வாறு அவர் கூறினார்.

