நீங்கள் இருக்க வேண்டிய இடம் அதிமுகதான்; துரைமுருகனை பார்த்து பாவப்பட்ட இபிஎஸ்
நீங்கள் இருக்க வேண்டிய இடம் அதிமுகதான்; துரைமுருகனை பார்த்து பாவப்பட்ட இபிஎஸ்
UPDATED : ஆக 13, 2025 09:20 PM
ADDED : ஆக 13, 2025 09:02 PM

திருப்பத்தூர்: திமுகவில் இருப்பதால்தான் மூத்த அமைச்சர் துரைமுருகனுக்கு துணை முதல்வர் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர் இருக்க வேண்டிய இடம் அதிமுகதான், என்று திருப்பத்தூரில் தொண்டர்கள் மத்தியில் பேசிய இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே இபிஎஸ் பேசியதாவது; இன்றைய தினம் முதல்வர் தினமும் புதிய திட்டம் அறிவித்து, அதை சாதித்தது போன்று பொய்யான தோற்றம் உருவாக்குகிறார். இவர் தொடங்கும் திட்டமெல்லாம் ஏற்கனவே அதிமுக ஆட்சியில் நடைமுறைப்படுத்திய திட்டங்கள். அதற்கு ஸ்டிக்கர் ஒட்டி பெயரைச் சூட்டி பொய்யான நாடகத்தை அரங்கேற்றுகிறார்.
பழி சுமத்துவது நியாயமா?
இந்த ஆட்சியில் எந்த ஒரு பெரிய திட்டமாவது திருப்பத்தூருக்குக் கொண்டுவந்தார்களா? மின் கட்டண உயர்வுக்கு உதய் மின் திட்டத்தில் நாங்கள் கையெழுத்துப் போட்டதுதான் காரணம் என்கிறார் அமைச்சர் டிஆர்பி ராஜா. உதய் மின் திட்டத்திற்கு இரண்டு நிபந்தனை விதித்தோம்.3 மாதத்துக்கு ஒரு முறை மின்கட்டணம் மாற்றியமைக்கும் நிபந்தனையை ரத்துசெய்யச் சொன்னோம், விவசாய மின் இணைப்புக்கு மீட்டர் பொறுத்தும் நிபந்தனையையும் ரத்து செய்யச் சொன்னோம். அதனை ஏற்று ரத்து செய்தபிறகே 2017ல் கையெழுத்திட்டோம், 2021 வரை, அதாவது எங்கள் ஆட்சி முடியும் வரை மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு உயர்த்திவிட்டு எங்கள் மீது பழி சுமத்துவது நியாயமா? மக்களை மடைமாற்றம் செய்ய முயற்சிக்கிறது திமுக.
டாய்லெட் கழுவுவதிலும் கூட ஊழல்
மதுரை மாநகராட்சியில் 150 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக மதுரை மேயரின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். திமுக ஆட்சியில், திமுக ஊழல் செய்ததாக, திமுக அரசே கைது செய்து உள்ளது. நாம் சொன்னது உண்மைதானே? திருநெல்வேலி மேயருக்கும் கவுன்சிலர்களுக்கும் பங்கு பிரிப்பதில் பிரச்னை உண்டானது. எனவே, திமுக மேயர் மீது திமுக கவுன்சிலர்களே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தார்கள். அதேபோல காஞ்சிபுரத்தில் திமுக மேயர் மீது திமுக கவுன்சிலர்களே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறார்கள். எல்லாமே, பங்கு பிரிப்பதில் தகராறு.
சென்னை மாநகராட்சியில் எப்படியெல்லாம் மக்கள் வரிப்பணத்தை மாநகராட்சி பொறுப்பாளர்கள் கொள்ளையடிக்கிறார்கள் என்று பாருங்கள். டாய்லெட் சுத்தம் செய்வதற்கு ஒரு நாளைக்கு 800 ரூபாய். டாய்லெட் கழுவுவதிலும் கூட ஊழல் செய்த அரசு திமுக அரசு. இது 1000 கோடி ரூபாய் ஊழல். இது டைம்ஸ் ஆப் இந்தியாவில் எழுதியிருக்கிறார்கள். இதை நாம் சொன்னால் பொய் என்று சொல்வார். அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் இதன் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கிட்னி காணாமல் போய்விடும்
இப்போது உடலில் இருக்கும் உறுப்பையும் திமுகவினர் திருட ஆரம்பித்துவிட்டனர். யாரும் திமுகவினர் கிளினிக் போகாதீர்கள், உடம்பில் கிட்னி காணாமல் போய்விடும். அது திமுக எம்.எல்.ஏ. மருத்துவமனை என்பதால் நடவடிக்கை எடுக்கவில்லை. உடல் உறுப்பைத் திருடும் கும்பலின் ஆட்சி தொடர வேண்டுமா? உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதை மட்டும் ரத்து செய்திருக்கிறார்கள். இந்த முறைகேட்டில் ஈடுபட்ட எவரையும் கைதுசெய்யவில்லை. காரணம் திமுக எம்.எல்.ஏ.வோட மருத்துவமனை.
அதிமுகவில் நான் இருப்பதால்தானே நான் இந்த நிலைக்கு வந்தேன். திமுகவில் அப்பா அமைச்சர், மகன் எம்எல்ஏ, ஐ.பெரியசாமி அமைச்சர், அவர் மகன் எம்எல்ஏ நேரு அமைச்சர், அவர் மகன் எம்பி இப்படித் தான் இருக்கிறது திமுக. எம்ஜிஆர் ஜெயலலிதா இருக்கும்போதும் சாதாரண தொண்டர் கூட எம்.எல்.ஏ ஆக முடியும். ஏற்காடு எம்.எல்.ஏ பெண் உறுப்பினர் 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றியவர், அவருக்கு அம்மா வாய்ப்பு கொடுத்தார்கள். அடுத்து 2021ல் அவருக்கே மீண்டும் சீட் கொடுத்தோம். கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பெயின்டர். அவர் கட்சிக்கு உழைத்தார். எனவே, வாய்ப்பு கொடுத்தோம். இதுதான் அதிமுக. மதம், ஜாதி, பணக்காரன், ஏழை என்பது கிடையாது. திமுகவில் அப்படி ஏழையால் வரமுடியுமா?, என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுக ஆட்சியில் உறுதி
முன்னதாக, திருப்பத்தூர் நகரில் உள்ள தனியார் விடுதியில் அனைத்து சங்கங்களின் விற்பனையாளர் சங்க நிர்வாகிகள் முனைவோர்களுடன் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கலந்துரையாடினார்.
அப்போது, அவர் பேசியதாவது; இந்த அரசு தேர்தல் அறிக்கையில் தடுப்பணைகள் கட்ட 2 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், அதன் மூலம் 200 தடுப்பணைகள் கட்டப்படும் என்றும் அறிவித்தார்கள். அது அறிவிப்போடு நின்று விட்டது. மீண்டும் அதிமுக அரசு அமைந்தவுடன் நீர்மேலாண்மைக்கு முன்னுரிமை கொடுத்து தடுப்பணைகள் கட்டப்படும். மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் குடிமராமத்து திட்டம் தொடரும். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் பாம்பாற்றில் உள்ள மண் திட்டுகளை அகற்றி ஆழப்படுத்தும் சூழ்நிலையை உருவாக்குவோம்.
பட்டப்பகலில் துணிச்சலாக திருடக்கூடிய சூழ்நிலையில் இந்த ஆட்சியில் நடக்கிறது. இதற்கு காரணம் காவல்துறையை முழுமையாக செயல்பட இந்த அரசு அனுமதிக்கவில்லை. காவல்துறைக்கே பாதுகாப்பில்லை. அதிமுக ஆட்சி இருந்த போது, அதற்கு எந்த சமரசமும் கிடையாது. ரயில்வே மேம்பாலத்தை வாணியம்பாடியில் அமைக்க நடவடிக்கை எடுப்போம்.
வாணியம்பாடி நகரத்தில் இருந்து வெளியேறுகின்ற கழிவுநீரை சுத்திகரித்து பாலாற்றில் விட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறீர்கள். இது ஒரு பெரிய திட்டம். நான் முதல்வராக இருந்த மிகப்பெரிய திட்டத்தை தயார் செய்து பிரதமரிடம் கொடுத்தோம். அதை குடியரசுத் தலைவர் உரையில் இடம்பெற செய்து அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிட்டார்கள். இந்த ஆண்டு இந்த திட்டத்திற்காக மத்திய அரசு அறிவித்து 11500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு குறித்து தேர்தல் அறிவிப்பில் இடம் பெறும், என்றார்.