அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானம் தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானம் தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
ADDED : ஜன 20, 2024 12:01 AM
புதுடில்லி:அ.தி.மு.க., பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்கக்கோரி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று நிராகரித்தது. பொதுக்குழு முடிவுக்கு இடைக்கால தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 2022, ஜூலையில் நடந்த அ.தி.மு.க., பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், பொதுச்செயலர் தேர்தல் ஆகியவற்றிற்கு தடை விதிக்க கோரி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுக்களை கடந்த டிசம்பர் 8ல் தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள், உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பன்னீர்செல்வம் சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் ஆஜராகி வாதிட்டதாவது:
பன்னீர்செல்வம், கட்சி விதிகளின்படி நீக்கம் செய்யப்படவில்லை. அவரை நீக்கிய தீர்மானம் பொதுக்குழு விதிகளுக்கு முரணானது. எனவே, பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
இதை தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
பொதுக்குழு தீர்மானங்களுக்கு எப்படி தடை விதிக்க முடியும்? விசாரணை நீதிமன்றத்தில், இந்த வழக்குகள் நிலுவையில் இருப்பதால், தற்போது அதில் தலையிட்டால் அது மேலும் சிக்கலாகி விடும்.
எனவே, அ.தி.மு.க., பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இந்த விவகாரத்தில் இடைக்கால தடை பிறப்பிக்க முடியாது.
சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பிலும் தற்போது தலையிட முடியாது. அ.தி.மு.க., பொதுக்குழு தொடர்பான மூல வழக்கை தொடர்ந்து நடத்துவதில் தடையில்லை.
விசாரணை நீதிமன்றம் இந்த சிவில் வழக்குகளை விரைந்து விசாரிக்கும் என நம்புகிறோம். எழுத்துப்பூர்வமான வாதங்களை, அடுத்த மூன்று வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
தற்போதைய சூழ்நிலையில் பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதித்தால், அ.தி.மு.க.,வின் நிலை இன்னும் மோசமாகிவிடும். கட்சிக்குள் பிளவு இருப்பது நன்றாக தெரிகிறது. அதற்கு கட்சியே தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.