கோவாக்ஸின் தடுப்பூசியால் பக்கவிளைவு இல்லை: ஐ.சி.எம்.ஆர்., விளக்கம்
கோவாக்ஸின் தடுப்பூசியால் பக்கவிளைவு இல்லை: ஐ.சி.எம்.ஆர்., விளக்கம்
ADDED : மே 20, 2024 02:36 PM

புதுடில்லி: 'கோவாக்ஸின் தடுப்பூசி செலுத்திய 30 சதவீத பேர் பக்கவிளைவுகளை சந்திப்பதாக பனாரஸ் பல்கலைக்கழகம் ஆய்வறிக்கை வெளியிட்டிருந்தது. ஆய்வை திரும்ப பெறாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என பனாரஸ் பல்கலைக்கழகத்திற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.,) எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோவிட் தடுப்பு ஊசியான கோவாக்ஸின் போட்டவர்களில் 30 சதவீதம் பேருக்கு, நரம்பியலில் பாதிப்பு, தோல் நோய், மூட்டு இணைப்பு, சதைப்பிடிப்பு மற்றும் பெண்களுக்கு மாதவிடாய் கால மாற்றம் உள்ளிட்ட பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என பனாரஸ் பல்கலைக்கழகம் ஆய்வறிக்கை வெளியிட்டிருந்தது.
ஐ.சி.எம்.ஆர்., மறுப்பு
இது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ( ஐ.சி.எம்.ஆர்.,) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவாக்ஸின் தடுப்பூசி குறித்து, பனாரஸ் பல்கலைகழகத்தின் சமீபத்திய ஆய்விற்கு தங்களிடம் ஒப்புதல் எதுவும் பெறவில்லை.
தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களில் சுமார் 30% பேர் பக்கவாதம், நரம்பியல் கோளாறு அல்லது சுவாசக் கோளாறுகள் உள்ளிட்டவற்றை அனுபவித்ததாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
முறையாக ஆய்வு நடத்தாமல், பக்க விளைவு இருப்பதாக, கூறப்பட்டுள்ளது. ஆய்வு முடிவை திரும்ப பெற வேண்டும். ஆய்வு முடிவுகளில் தங்கள் பெயரை நீக்க வேண்டும். ஆய்வை திரும்ப பெறாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

