திருமண அழைப்பிதழில் பிரசாரம்; வழக்கை ரத்து செய்தது ஐகோர்ட்
திருமண அழைப்பிதழில் பிரசாரம்; வழக்கை ரத்து செய்தது ஐகோர்ட்
ADDED : டிச 17, 2024 10:17 PM
பெங்களூரு; லோக்சபா தேர்தல் வேளையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஓட்டு போடும்படி, தன் திருமண பத்திரிகையில் பிரசாரம் செய்த மணமகன் மீது மாநில தேர்தல் ஆணையம் தொடர்ந்த வழக்கை, கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
தட்சிண கன்னடா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிவபிரசாத். இவருக்கு 2024 ஏப்ரல் 18ல் திருமணம் நடந்தது.
இதற்காக, அச்சடித்த திருமண அழைப்பிதழில், 'மோடி மீண்டும் பிரதமராக, அவருக்கு ஓட்டு போடுவதே, புதுமண தம்பதிக்கு நீங்கள் அளிக்கும் பரிசாகும்' என குறிப்பிட்டிருந்தார்.
சமூக வலைதளங்கள், ஊடகங்கள் மூலம் இதை பார்த்த தேர்தல் அதிகாரிகள், உப்பினங்கடி போலீசில், சிவபிரசாத் மீது புகார் அளித்தனர். போலீசாரும் வழக்குப் பதிவு செய்தனர்.
இதையறிந்த சிவபிரசாத், தன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இம்மனு மீதான விசாரணை, நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் நடந்து வந்தது. வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து, கடந்த மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஇருந்தது.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிவபிரசாத் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வினோத்குமார் வாதிடுகையில், ''லோக்சபா தேர்தல் தேதி, மார்ச் 16ம் தேதி தான் அறிவிக்கப்பட்டது.
ஆனால், சிவபிரசாத், மார்ச் 1ம் தேதியே பத்திரிகை அச்சடித்து விட்டார். எனவே, மனுதாரர் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இவ்வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.