புதிய நிர்வாகிகளுடன் பா.ஜ., தேசிய தலைவர் நிதின் நபின் ஆலோசனை!
புதிய நிர்வாகிகளுடன் பா.ஜ., தேசிய தலைவர் நிதின் நபின் ஆலோசனை!
UPDATED : ஆக 22, 2026 11:29 PM
ADDED : ஆக 22, 2026 09:14 PM
- நமது டில்லி நிருபர் -
பா.ஜ.,வில் தேசிய அளவில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுடன், அக்கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபின், 47, நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார். இதில், 'வந்தே மாதரம்' பாடலின் முதலிரண்டு பத்திகளை மட்டுமே பாடுவோம் என அறிவித்த காங்கிரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு, இளம் தலைமுறையினரை சென்றடைய பிரத்யேக குழுவும் அமைக்கப்பட்டது.
பீஹாரைச் சேர்ந்த நிதின் நபின், பா.ஜ.,வின் தேசிய தலைவராக கடந்த ஜனவரியில் பொறுப்பேற்றார். அக்கட்சியின் முதல் இளம் தேசிய தலைவர் இவர். ஆறு மாதங்களாக நடந்த பல கட்ட ஆலோசனைக்கு பின், கட்சியில் தேசிய அளவில் புதிய நிர்வாகிகளை சமீபத்தில் நியமித்தார். இதில், அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர்களும், இளம் நிர்வாகிகளும் இடம்பெற்றுள்ளனர். புதிய குழுவில் உள்ளவர்களின் சராசரி வயது, 55.
இந்நிலையில், டில்லியில் உள்ள பா.ஜ., தலைமை அலுவலகத்தில், கட்சியில் தேசிய அளவில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளின் அறிமுகக் கூட்டம், நிதின் நபின் தலைமையில் நேற்று நடந்தது. இதில், பா.ஜ., அமைப்பு பொதுச்செயலர் பி.எல்.சந்தோஷ், கட்சியின் தேசிய துணைத் தலைவர்களில் ஒருவரான ராம் மாதவ், கட்சியின் தேசிய பொதுச்செயலர்களில் ஒருவரான முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ., அரசின் சாதனைகளை நாடு முழுதும் விளக்க திட்டத்தை தயாரிப்பது, அடுத்தாண்டு பிப்ரவரியில் சட்டசபை தேர்தலை சந்திக்கும் பஞ்சாப், உ.பி., உத்தரகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் வெற்றி பெறுவதற்கான திட்டங்களை உருவாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.
குறிப்பாக, இளம் தலைமுறையினரை சென்றடைவது குறித்து நீண்ட நேரம் ஆலோசிக்கப்பட்டது. முடிவில், இளம் தலைமுறையினரை சென்றடைவதற்கான சிறப்பு திட்டத்தை முன்னெடுக்க, நிதின் நிபின் தலைமையில் பிரத்யேக குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதில், கட்சியின் தேசிய பொதுச்செயலர்கள் ஸ்மிருதி இரானி, வினோத் தாவ்டே, குஜராத் துணை முதல்வர் ஹர்ஷ் சங்கவி, சத்தீஸ்கர் அமைச்சர் ஓ.பி.சவுத்ரி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். ஜூலை இறுதியில் நடந்த டில்லி ஜந்தர் மந்தர் போராட்டத்துக்கு பின், பா.ஜ., தன் முழு கவனத்தையும் இளம் தலைமுறையினரை நோக்கி திருப்பி உள்ளது.
மேலும், கட்சியின் உட்கட்சி பூசல்களை தீர்ப்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதையடுத்து, வந்தே மாதரம் தேசிய பாடலின் முதலிரண்டு பத்திகளை மட்டுமே கட்சி நிகழ்ச்சிகளில் பாடுவோம் என, சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றிய காங்கிரசை கண்டித்தும், பா.ஜ., தீர்மானம் நிறைவேற்றியது.
இது குறித்து, பா.ஜ., தேசிய தலைவர் நிதின் நபின் கூறியதாவது:
'வந்தே மாதரம் பாடலின் முதலிரண்டு பத்திகளை மட்டுமே பாடுவது' என, தீர்மானம் நிறைவேற்றிய காங்கிரசை வன்மையாகக் கண்டிக்கிறோம். தேசிய பாடலை தாஜா செய்யும் அரசியலுக்காக பயன்படுத்துவதை எந்த விதத்திலும் ஏற்க முடியாது. இப்பாடலின் வரலாறு, பொருள், தேசிய முக்கியத்துவம் மற்றும் அதன் பெருமைமிக்க பாரம்பரியத்தை, நாட்டின் ஒவ்வொரு மூலைமுடுக்குக்கும் எடுத்துச் செல்ல, ஒரு பிரத்யேக இயக்கத்தை நாங்கள் தொடங்குவோம். இப்பாடலின் கவுரவம், கண்ணியம், பாரம்பரியம் மற்றும் தேசிய அடையாளத்தை பா.ஜ., எப்போதும் பாதுகாக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டம் முடிவடைந்த பின், பா.ஜ., தலைமை அலுவலகத்துக்கு வந்த பிரதமர் மோடியை நிதின் நபின், பி.எல்.சந்தோஷ் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து அவர், கட்சியின் புதிய நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.
