ஏட்டு - இன்ஸ்பெக்டர் மோதல்; போலீஸ் ஸ்டேஷனில் அதிர்ச்சி
ஏட்டு - இன்ஸ்பெக்டர் மோதல்; போலீஸ் ஸ்டேஷனில் அதிர்ச்சி
ADDED : ஜன 02, 2025 08:45 PM
பெங்களூரு; பணியிடத்தை மாற்றியதால், எரிச்சல் அடைந்த ஏட்டு ஒருவர், தற்கொலை நாடகமாடினார். இவரது செயலால் இன்ஸ்பெக்டருக்கு, குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சேர்ந்தார்.
பெலகாவியின் உத்யம்பாகா போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றுபவர் முதகப்பா உதகட்டி, 25. இவர் இரண்டு நாட்கள் விடுமுறையில் இருந்து, நேற்று முன்தினம் இரவு பணிக்கு வந்தார்.
இவரது பணியிடத்தை மாற்றிய இன்ஸ்பெக்டர் டி.கே.பாட்டீல், புதிய இடத்துக்கு சென்று பணியாற்றும்படி கூறினார்.ஆனால் அங்கு செல்ல விரும்பாத ஏட்டு முதகப்பா உதகட்டி, 'இப்போது பணியாற்றும் இடத்திலேயே பணியாற்றுவேன்; வேறு இடத்துக்கு செல்ல முடியாது' என, பிடிவாதம் பிடித்தார்.
அது மட்டுமின்றி, 'நான் விஷம் குடித்துவிட்டேன்' என கூறி தரையில் விழுந்து துடிதுடித்தார். இதை பார்த்து வெலவெலத்த இன்ஸ்பெக்டர் டி.கே.பாட்டீல், மற்ற ஏட்டுகளின் உதவியுடன் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஏட்டுவை பரிசோதித்த டாக்டர்கள், இவர் விஷம் ஏதும் குடிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தினர். அவருக்கு புத்திமதி கூறி அனுப்பினர்.
ஏட்டுவின் செயலால் சோர்வடைந்த இன்ஸ்பெக்டர் டி.கே.பாட்டீலுக்கு, குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டு மயங்கினார். அவருக்கு அதே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
நடந்த சம்பவம் பற்றி அறிந்த ஏ.சி.பி., சேகரப்பா, நேற்று காலை உத்யம்பாகா போலீஸ் நிலையத்துக்கு வந்து, முழுமையான தகவல் பெற்றார். இது குறித்து, பெலகாவி நகர போலீஸ் கமிஷனர் யுடா மார்ட்டினுக்கு தகவல் தெரிவித்தார். ஏட்டு மீது நடவடிக்கை எடுக்கப்படும் வாய்ப்பு உள்ளது.