மலிவு விலை மருந்து கடைகள் கர்நாடக ஜி.ஹெச்.,களில் மூடல்
மலிவு விலை மருந்து கடைகள் கர்நாடக ஜி.ஹெச்.,களில் மூடல்
ADDED : ஆக 07, 2025 12:49 AM

பெங்களூரு: கர்நாடக அரசு மருத்துவமனைகள் வளாகத்தில் உள்ள மலிவு விலை மருந்து கடைகளை மூடுவது குறித்து, மத்திய அரசுக்கு மாநில அரசு கடிதம் எழுதியுள்ளது.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டாவுக்கு, மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் எழுதியுள்ள கடிதம்:
பொதுமக்களுக்கு கைக்கெட்டும் விலையில், தரமான மருந்துகளை வழங்கும் உங்கள் அக்கறையை பாராட்டுகிறேன்.
இலவசம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள மலிவு விலை மருந்துக் கடைகளை மூடக்கூடாது என, முதல்வருக்கு நீங்கள் எழுதிய கடிதம், என் கவனத்துக்கும் வந்தது.
கர்நாடகாவில் அரசு மருத்துவமனைகளில் தேவையான அனைத்து மருந்துகளையும், மாநில அரசு இலவசமாக வழங்குகிறது.
அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள், மருந்துகள் கிடைக்காமல் அவதிப்படுவதை தவிர்க்கும் நோக்கில், அரசு மருந்தகங்களில் கிடைக்கும் மருந்துகளை மட்டுமே எழுதித்தர வேண்டும் என, டாக்டர்களுக்கும் உத்தரவிட்டுள்ளோம்.
கர்நாடக மருந்துகள் வினியோக கார்ப்பரேஷன் லிமிடெட் மூலமாக, அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்துகள் வழங்கப்படுகின்றன.
மருத்துவமனைகளுக்கு நிதியும் வழங்கப்பட்டுள்ளது. எந்த மருந்தாவது பற்றாக்குறை ஏற்பட்டால், அந்த நிதியை பயன்படுத்தி மருந்துகள் வாங்கி, நோயாளிகளுக்கு வழங்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
மாநில அரசே மருந்துகளை இலவசமாக வழங்குவதால், அரசு மருத்துவமனைகள் வளாகத்தில் உள்ள மத்திய அரசின் மலிவு விலை மருந்துக் கடைகளை மூட முடிவு செய்துள்ளோம்.
முதல் இடம் கர்நாடகாவில், 1,400க்கும் மேற்பட்ட மலிவு விலை மருந்துக் கடைகள் உள்ளன. இதில், நாட்டிலேயே முதல் இடத்தில் கர்நாடகா உள்ளது.
இவற்றில் வெறும், 184 மருந்துக் கடைகள் மட்டுமே, சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் அரசு மருத்துவமனைகள் வளாகத்தில் இயங்குகின்றன. இவை மட்டுமே மூடப்படுகின்றன.
மற்ற மருந்துக் கடைகள் வழக்கம் போல் செயல்படும். மாநில அரசின் முடிவால், நோயாளிகளுக்கு பணம் மிச்சமாகும். அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் பற்றாக்குறை இல்லாமல் பார்த்துக் கொள்வோம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.