பாக்., உடன் சண்டையை தொடர விரும்பவில்லை; ஆப்கன் அமைச்சர் திட்டவட்டம்
பாக்., உடன் சண்டையை தொடர விரும்பவில்லை; ஆப்கன் அமைச்சர் திட்டவட்டம்
ADDED : அக் 12, 2025 04:40 PM

புதுடில்லி; பாகிஸ்தானுடன் சண்டையை தொடர விரும்பவில்லை என்று டில்லி வந்திருக்கும் ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர்கான் முட்டாகி திட்டவட்டமாக கூறி உள்ளார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள தெஹ்ரிக் - இ - தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவர் நுார் வாலி மெஹ்சுத்தை குறி வைத்து, பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் பாகிஸ்தானில் எல்லையில் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த தாக்குதலில் 58 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், கிட்டத்தட்ட 25 ராணுவ முகாம்களை கைப்பற்றிவிட்டதாகவும் ஆப்கன் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
இந் நிலையில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கன் வெளியுறவு அமைச்சர் அமீர்கான் முட்டாகி டில்லியில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;
ஆப்கனில் தெஹ்ரிக் இ தாலிபான் இயக்கம் இல்லை. நாங்கள் காபூல் வரும் முன்னரே அவர்கள் நாட்டு பழங்குடியின மக்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக ஏராளமான மக்கள் அங்கிருந்து வெளியேறினர்.
அமெரிக்க ராணுவம், அந்நாடு ஆதரவு பெற்ற முன்னாள் அரசாங்கமும் அவர்களுக்கு ஆப்கன் மண்ணில் அடைக்கலம் கொடுத்து இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் பாகிஸ்தானில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள். அவர்களின் நாட்டிலேயே அகதிகளாக வாழ அனுமதிக்கப்படுகின்றனர்.
ஆப்கன்-பாக். எல்லையானது 2400 கிலோ மீட்டர் தொலைவுக்கும் அதிகமானது. வலிமையினால் மட்டுமே அதை கட்டுப்படுத்த முடியாது. பாகிஸ்தான் அமைதியை விரும்புகிறது என்றால், அவர்களால் ஏன் அதை கட்டுப்படுத்த முடியவில்லை. அவர்கள்(பாக்) எங்களை குறை கூறும் முன்னர், அவர்கள் நாட்டு பிரச்னைகளை தீர்க்க வேண்டும். ஏன் அவர்கள் தங்கள் நாட்டு மக்கள் மீது அக்கறை காட்டவில்லை?
பாகிஸ்தானில் வாழும் மக்களும் மட்டுமல்ல… நாங்களும் சண்டையை தொடர விரும்பவில்லை. ஆனால், அங்குள்ள குழுக்களை பாகிஸ்தான் நிச்சயம் கட்டுப்படுத்த வேண்டும். யாரோ ஒரு சிலரை மகிழ்ச்சிப்படுத்த ஏன் சொந்த நாட்டு மக்களை துயரத்திற்கு ஆளாக்க வேண்டும்?
இவ்வாறு அமீர்கான் முட்டாகி கூறினார்.
இரண்டு நாட்களுக்கு முன் ஆப்கன் வெளியுறவு அமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் ஆண் செய்தியாளர்களுக்கு மட்டுமே பேட்டி அளித்ததாக புகார் எழுந்தது. எதிர்க்கட்சிகள் மத்திய அரசை குறை கூறினர். ஆனால், இதற்கும் அரசுக்கும் சம்பந்தமில்லை என்று மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று, பெண் செய்தியாளர்களும் பங்கேற்கும் வகையிலான சந்திப்பை ஆப்கன் வெளியுறவு அமைச்சர் நடத்தினார்.