துபாயில் கேரள அமைப்பினர் நிகழ்ச்சிக்கு அழையா விருந்தாளியாக வந்த அப்ரிடி
துபாயில் கேரள அமைப்பினர் நிகழ்ச்சிக்கு அழையா விருந்தாளியாக வந்த அப்ரிடி
ADDED : ஜூன் 01, 2025 01:15 AM

புதுடில்லி : நம் நாட்டுக்கு எதிராக தொடர்ந்து அவதுாறாக பேசி வரும் பாக்., முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடி, துபாயில், கேரள அமைப்பினர் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்றது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை, 'ஆப்பரேஷன் சிந்துார்' வாயிலாக நம் ராணுவத்தினர் அழித்தனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த, பாக்., கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி, இந்தியா குறித்து அவதுாறாக பேசியதோடு, நம் படைகளையும் விமர்சித்தார்.
மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில், 'பாக்., சங்கம் துபாய்' என்ற அரங்கில், கேரளாவின் கொச்சின் பல்கலை பி.டெக்., முன்னாள் மாணவர் சங்கம் சார்பில், கடந்த வாரம் நிகழ்ச்சி நடந்தது. இதில், பாக்., முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஷாஹித் அப்ரிடி, உமர் குல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, நம் நாட்டுக்கு எதிராக பேசி வரும் ஷாஹித் அப்ரிடி, கேரள அமைப்பினர் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், கொச்சின் பல்கலை பி.டெக்., முன்னாள் மாணவர் சங்கம் வெளியிட்ட அறிக்கை:
மே 25ல், எங்கள் நிகழ்ச்சி நடந்த அதே அரங்கிற்கு, வேறொரு நிகழ்ச்சியில் பங்கேற்க பாக்., கிரிக்கெட் வீரர்கள் ஷாஹித் அப்ரிடி, உமர் குல் வந்தனர். எங்கள் நிகழ்ச்சி நிறைவடையும் நேரத்தில், அழையா விருந்தாளியாக அவர்கள் திடீரென வந்தனர்.
நாங்கள் யாரும் அவர்களை அழைக்கவில்லை. இந்த சம்பவம் யாரையாவது புண்படுத்தி இருந்தால், மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.