'சீட்' கிடைத்ததும் சிவசேனாவுக்கு தாவிய பா.ஜ., செய்தி தொடர்பாளர்
'சீட்' கிடைத்ததும் சிவசேனாவுக்கு தாவிய பா.ஜ., செய்தி தொடர்பாளர்
ADDED : அக் 29, 2024 11:13 PM

மும்பை : மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில், பா.ஜ., செய்தித் தொடர்பாளர் ஷைனாவுக்கு, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா சார்பில் சீட் வழங்கப்பட்டதும், அவர் பா.ஜ.,வில் இருந்து அதிரடியாக விலகி சிவசேனாவில் இணைந்தார்.
மஹாராஷ்டிராவில், நவ., 20ல் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில், மாநிலத்தை ஆளும் கூட்டணி கட்சிகளான பா.ஜ., - ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா மற்றும் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்., இணைந்து, 'மஹாயுதி' என்ற பெயரில் ஒரு அணியாக போட்டியிடுகின்றன.
இவர்களை எதிர்த்து காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்., ஆகிய கட்சிகள், 'மஹா விகாஸ் அகாடி' என்ற பெயரில் களமிறங்கியுள்ளன.
இந்நிலையில், பா.ஜ., செய்தித் தொடர்பாளரான ஷைனா, மும்பையின் வொர்லி தொகுதியில் போட்டியிட கட்சியில் சீட் கேட்டிருந்தார்.
ஆனால் அந்த தொகுதி, ஏக்நாத் ஷிண்டே அணியில் மிலிந்த் தியோராவுக்கு ஒதுக்கப்பட்டது. அவர், உத்தவ் மகன் ஆதித்யா தாக்கரேவை எதிர்த்து போட்டியிடுகிறார்.
இதனால் சோர்வடைந்த ஷைனாவுக்கு, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா சார்பில் மும்பாதேவி தொகுதியில் போட்டியிட சீட் வழங்கப்பட்டது.
இதையடுத்து, அவர் பா.ஜ.,வில் இருந்து விலகி ஏக்நாத் ஷிண்டே முன்னிலையில், சிவசேனாவில் நேற்று இணைந்தார்.
சிவசேனாவில் இணைந்தாலும் பிரதமர் மோடி, மஹாராஷ்டிரா துணை முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான தேவேந்திர பட்னவிஸ் ஆகியோருக்கு அவர் நன்றி தெரிவித்து உள்ளார்.