மஹாராஷ்டிராவிலும் ஆர்.எஸ்.எஸ்., களமிறங்குவதால் பா.ஜ., மகிழ்ச்சி
மஹாராஷ்டிராவிலும் ஆர்.எஸ்.எஸ்., களமிறங்குவதால் பா.ஜ., மகிழ்ச்சி
ADDED : அக் 21, 2024 03:40 AM

புதுடில்லி : ஹரியானா சட்டசபை தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் வாய்ப்பை உருவாக்கி தந்ததுபோல், மஹாராஷ்டிராவிலும், ஆர்.எஸ்.எஸ்., களமிறங்கியுள்ளதால், பா.ஜ., தலைமை மகிழ்ச்சி அடைந்துள்ளது.
தொகுதி பங்கீடு
மஹாராஷ்டிரா சட்டசபைக்கு நவ., 20ல் ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்., ஆகியவற்றுடன் இணைந்து பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கு கடுமையான போட்டியை எதிர்கொள்ளும் நிலையில், ஆளும் மஹாயுதி கூட்டணி உள்ளது.
காங்கிரஸ், சரத் பவார் பிரிவு தேசியவாத காங்., உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா ஆகியவை அடங்கிய, மஹா விகாஸ் அகாடி கூட்டணி புதிய தெம்புடன் உள்ளது. லோக்சபா தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றியதே இதற்கு காரணம். தொகுதிப் பங்கீடு தொடர்பாக இரு கூட்டணியிலும் இறுதிக்கட்ட பேச்சுகள் நடந்து வருகின்றன.
இது ஒரு பக்கம் இருந்தாலும், தேர்தல் பிரசாரத்தில் கூட்டணிகள் தீவிரமாக இறங்கியுள்ளன. ஹரியானாவில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலின்போது, கருத்துக் கணிப்பு மற்றும் ஓட்டுப்பதிவுக்கு பிந்தைய கணிப்புகள், பா.ஜ., ஆட்சியை இழக்கும் என்றே கூறின.
ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், தனிப்பெரும்பான்மையுடன், தொடர்ந்து மூன்றாவது முறையாக பா.ஜ., ஆட்சி அமைத்தது. பா.ஜ.,வின் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம், அதை அரசியல் ரீதியில் வழிநடத்தும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு தேர்தல் களத்தில் இறங்கியதுதான்.
இதையடுத்து, மஹாராஷ்டிராவிலும் ஆர்.எஸ்.எஸ்., களமிறங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது, மாநில அரசு மற்றும் பா.ஜ.,வுக்கு மகிழ்ச்சியையும், புது தெம்பையும் அளித்துள்ளது.
இது குறித்து, பா.ஜ., மூத்த தலைவர்கள் கூறியுள்ளதாவது: ஹரியானாவில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு மேற்கொண்ட யுத்திகளே, பா.ஜ.,வின் வெற்றிக்கு முக்கியமான காரணம்.
கலந்துரையாடல்
'டோலி' எனப்படும் சிறு குழுக்களாக பிரிந்து, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர், மக்களை சந்திப்பர்; ஐந்து முதல் 10 பேர் கொண்ட சிறிய குழுக்கள் அல்லது தங்களுக்கு தெரிந்த குடும்பத்தினர் இடையே இவர்கள் பேசுவர்.
அப்போது, பா.ஜ.,வுக்கு ஆதரவாக அவர்கள் நேரடியாக பேச மாட்டார்கள். அந்தக் குழுக்களில் உள்ளவர்களின் மனநிலையைப் புரிந்து, தற்போதைய நிலையில், பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்க வேண்டிய அவசியம் குறித்து விரிவாக விவரிப்பர்.
அதனடிப்படையில், மக்களே தங்களுடைய முடிவை எடுப்பர். அவ்வாறு பா.ஜ.,வுக்கு சாதகமான முடிவை அவர்கள் எடுக்கும் வகையில், ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகளின் கலந்துரையாடல் இருக்கும்.
ஹரியானாவில், 1.25 லட்சம் கூட்டங்களை, ஆர்.எஸ்.எஸ்., இவ்வாறு நடத்தியது. தற்போது, மஹாராஷ்டிராவிலும் ஆர்.எஸ்.எஸ்., களமிறங்கியுள்ளது. பா.ஜ., நிர்வாகிகள் உதவியுடன், மக்களை சந்திக்கும் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

