sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

லோக்சபா தேர்தல் முடிவுக்கு பின்... தாவ மாட்டோம்! இண்டியா' கூட்டணி கட்சிகள் முடிவு

/

லோக்சபா தேர்தல் முடிவுக்கு பின்... தாவ மாட்டோம்! இண்டியா' கூட்டணி கட்சிகள் முடிவு

லோக்சபா தேர்தல் முடிவுக்கு பின்... தாவ மாட்டோம்! இண்டியா' கூட்டணி கட்சிகள் முடிவு

லோக்சபா தேர்தல் முடிவுக்கு பின்... தாவ மாட்டோம்! இண்டியா' கூட்டணி கட்சிகள் முடிவு

35


UPDATED : ஜூன் 02, 2024 04:11 AM

ADDED : ஜூன் 02, 2024 02:27 AM

Google News

UPDATED : ஜூன் 02, 2024 04:11 AM ADDED : ஜூன் 02, 2024 02:27 AM

35


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லோக்சபா தேர்தல் முடிவுகளில், நம் கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. ஒரு வேளை, பா.ஜ., கூட்டணியில் பெரும்பான்மைக்கு ஒருசில இடங்கள் தேவைப்படும் சூழ்நிலையில், யாரும் அணி தாவக்கூடாது என்பது குறித்து, 'இண்டியா' கூட்டணி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

லோக்சபா தேர்தலுக்கான ஏழாவது மற்றும் கடைசி கட்ட ஓட்டுப்பதிவு நேற்று முடிவுக்கு வந்தது. நாளை மறுதினம் ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது.

இந்நிலையில், ஓட்டு எண்ணிக்கையின்போது எவ்வாறு செயல்படுவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்க, எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு, காங்கிரஸ் அழைப்பு விடுத்திருந்தது.

இதன்படி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் இல்லத்தில் நேற்று இந்த சந்திப்பு நடந்தது. காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா, ராகுல் மற்றும் பொதுச்செயலர் பிரியங்கா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஓட்டுப்பதிவு


ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், அக்கட்சியின் பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் பங்கேற்றனர்.

கூட்டணி கட்சித் தலைவர்களான சரத் பவார், பரூக் அப்துல்லா, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், சீத்தாராம் யெச்சூரி, ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஓட்டுப்பதிவு நடைபெறுவதாலும், புயல் பாதிப்பு நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதாலும், தம்மால் கலந்து கொள்ள இயலாது என்று ஏற்கனவே கூறிவிட்டதால், திரிணமுல் காங்., தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி பங்கேற்கவில்லை.

மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெஹபூபா முப்தியும் வரவில்லை. தி.மு.க., சார்பில் மூத்த எம்.பி., பாலு, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா வந்திருந்தனர்.

கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது தொடர்பாக, மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளதாவது:

இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகளுமே இணைந்து ஒற்றுமையாகவே இருக்கிறோம். தேர்தலை சந்தித்த விதம் குறித்தும், அதன் அனுபவம் குறித்தும், பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டோம்.

ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் நாளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசித்தோம். ஓட்டுச்சாவடியில் ஒவ்வொரு நிமிடமும் விழிப்புடன் இருந்தாக வேண்டிய அவசியம் உள்ளது.

அதனால், ஓட்டு எண்ணிக்கை முடிந்து, வெற்றிச் சான்றிதழை ஒவ்வொரு வேட்பாளரும் பெறும் வரையில், ஓட்டுச் சாவடியை விட்டு வெளியேற விடாமல் இருக்க வேண்டும்.

தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகள் குறித்தும் ஆலோசித்தோம். இந்த கணிப்புகள் பெரும்பாலும் உண்மை நிலவரங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

இருப்பினும், விரிவான ஆலோசனையின் முடிவாக, தேர்தலுக்குப் பிந்தைய கணிப்பு குறித்த விவாதங்களில் இண்டியா கூட்டணி பங்கேற்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், எங்களுக்கு கிடைத்துள்ள தரவுகளின் அடிப்படையில் இந்த தேர்தல் முடிவுகளின்போது, இண்டியா கூட்டணிக்கு 295 இடங்கள் வரையில் கிடைப்பது உறுதி. நிச்சயம் மத்தியில் இண்டியா கூட்டணியின் ஆட்சி தான் அமையும்.

காரணம், பல்வேறு அரசுத்துறை நிறுவனங்கள் எடுத்துள்ள கணிப்புகளின்படியே, பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வராது என்றே தெரிய வந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

வெற்றி சான்றிதழ்


இந்தக் கூட்டம் குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியுள்ளதாவது:

ஓட்டு எண்ணிக்கையின் போது, மாநில மற்றும் மாவட்ட அளவில் மிகுந்த கவனமுடனும் விழிப்புடனும் இருந்து, வெற்றிச் சான்றிதழை பெற்று வருவது தொடர்பாக ஆலோசிப்பதற்காகவே, இந்த கூட்டம் என்று கூறப்பட்டது.

ஆனாலும், இண்டியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதை, இன்னொரு முறை பொதுவெளியில் உறுதிப்படுத்துவது தான், இந்த கூட்டத்தின் நோக்கம்.

காரணம், பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணியானது, பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை பெறுவதற்கு, கணிசமான இடங்கள் குறைவாக இருந்தால், அப்போது இண்டியா கூட்டணியிலிருந்து யாரும் தாவி விடக் கூடாது.

கூட்டணியின் மிக முக்கியமான கட்சியின் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால், இன்று திஹார் சிறைக்கு திரும்ப உள்ளார். எனவே, அவர் இருக்கும்போதே, சில விஷயங்களை நேரடியாக விவாதிக்க வேண்டியிருந்தது.

தவிர, தேர்தலுக்கு பிந்தைய கணிப்பு விவாதங்களில் பங்கேற்க மாட்டோம் என்று காங்., நிர்வாகி பவன் கெரா நேற்று முன்தினம் அறிவித்திருந்தார்.

மற்ற கட்சிகளை கேட்காமல், இந்த அறிவிப்பை காங்., வெளியிட்டதாக தெரிகிறது. இந்த புறக்கணிப்பு முடிவு சரியானதல்ல என்று, முக்கிய கட்சிகள் எல்லாம் காங்.,கிடம் வலியுறுத்தின.

விவாதங்களில் பங்கேற்றால் தான், பா.ஜ.,வையும், அதன் திட்டங்களையும் அம்பலப்படுத்த முடியும். புறக்கணித்தால், நம் முக்கியத்துவம் குறைந்துவிடும் என்று முக்கிய தலைவர்கள் எடுத்துக் கூறினர்.

இதையடுத்தே, இந்த கூட்டத்தில் அந்த விஷயம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு, கடைசியாக ஒரே நாளில் பல்டி அடித்து, விவாதங்களில் பங்கேற்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

'தமிழக முதல்வர் வராதது ஏன்?'

தி.மு.க., மூத்த தலைவர் டி.ஆர்.பாலு கூறியுள்ளதாவது:தேர்தல் முடிவுகளுக்கு பிறகு என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்பது குறித்து ஆலோசித்தோம். ஜனாதிபதிக்கு எழுத வேண்டிய கடிதம் குறித்தும் பேசினோம்.பா.ஜ., இந்த தேர்தலில் படுதோல்வியை தழுவும். பெரும்பான்மை இடங்களை நாங்கள் கைப்பற்றுவோம் என்ற முடிவுக்கு, இண்டியா கூட்டணி தலைவர்களான நாங்கள் வந்துள்ளோம்.நிச்சயமாக, மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சி அமைக்கும். பிரதமர் யார் என்பது குறித்து, 4ம் தேதி இரவு அல்லது 5ம் தேதி காலைக்குள் முடிவு செய்யப்படும். புதுச்சேரி உட்பட தமிழகத்தின் 40 தொகுதிகளிலும், தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும். இண்டியா கூட்டணி இந்த 40ல் இருந்து தான் துவங்கப் போகிறது.ஆலோசனைக் கூட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வராததை, மீடியாக்கள் தான் பெரிதுபடுத்துகின்றன. அவர் டில்லிக்கு வருவதாக திட்டம் இருந்தபோது, லேசாக காய்ச்சல் வந்தது. என்ன காய்ச்சல் என்பது தெரியாது. இந்த காலத்தில் என்ன காய்ச்சல் வரும் என்பது யாருக்கும் தெரியாது.டில்லி வந்தால், இன்னும் அதிகமாகலாம். இங்கு வெயில் அதிகமாக உள்ளது. எனவே, வர வேண்டாம் என்று நாங்கள் அறிவுரை வழங்கினோம். இன்றோ, நாளையோ அவரது உடல்நிலை சரியாகிவிடும்.இவ்வாறு அவர் கூறினார்.



-- நமது டில்லி நிருபர் -






      Dinamalar
      Follow us