மேற்கு வங்கத்தில் மீண்டும் வெடித்தது டாக்டர்கள் போராட்டம்; மறுபடியும் மம்தாவுக்கு தலைவலி
மேற்கு வங்கத்தில் மீண்டும் வெடித்தது டாக்டர்கள் போராட்டம்; மறுபடியும் மம்தாவுக்கு தலைவலி
ADDED : செப் 28, 2024 08:36 PM

கோல்கட்டா: இளம்பெண் டாக்டர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து டாக்டர்கள் நடத்தி வந்த போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில், அங்கு மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது.
அண்மையில் ஆர்.ஜி.,கர் மருத்துவமனையில் இரவுப்பணியில் இருந்த இளம்பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டியும், டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும், 40 நாட்களாக மேற்கு வங்கத்தில் டாக்டர்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், மருத்துவப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது.
முதல்வர் மம்தா பானர்ஜி பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், தங்களின் முடிவில் பிடிவாதமாக இருந்த டாக்டர்கள், பின்னர், அரசு அளித்த வாக்குறுதிகளின் பேரில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் டாக்டர்கள் மீது நோயாளியின் உறவினர்கள் தாக்குதல் நடத்தியதால், மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது.
கோல்கட்டா அருகே உள்ள கமர்ஹதி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவர் உயிரிழந்தார். இதனால், ஆத்திரமடைந்த உறவினர்கள், பணியில் இருந்த டாக்டர்களை தாக்கியுள்ளனர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட உறவினர்களில் 4 பேரை கைது செய்தனர். மேலும், இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே, மருத்துவப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தைக் கண்டித்து டாக்டர்கள் மற்றும் நர்சுகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், மேற்கு வங்கத்தில் மீண்டும் பரபரப்பு நிலவி வருகிறது. இது முதல்வர் மம்தா பானர்ஜிக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது