மீண்டும் பவார் Vs பவார்; பரபரப்பை கூட்டும் பாரமதி மோதல்
மீண்டும் பவார் Vs பவார்; பரபரப்பை கூட்டும் பாரமதி மோதல்
ADDED : அக் 30, 2024 09:48 AM

மும்பை: மஹாராஷ்டிரா, பாரமதி சட்டசபை தொகுதியில் துணை முதல்வர் அஜித் பவாரை எதிர்த்து, அவரது அண்ணன் மகன் யுகேந்திரா சரத்பவாரின் தேசிய வாத காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.
நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர் சரத் பவார். இவர் தொடங்கிய தேசியவாத காங்கிரஸ் கட்சியில், அண்ணன் மகன் அஜித் பவாருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தார். ஆனால் தனக்கு முதல்வர் பதவி கிடைக்காத வெறுப்பில் இருந்த அஜித் பவார், கட்சியை உடைத்துக் கொண்டு, தனக்கு ஆதரவான எம்.எல்.ஏ.,க்களுடன் பா.ஜ., கூட்டணியில் சேர்ந்து கொண்டார். இப்போது பா.ஜ., கூட்டணியில் இருக்கும் அஜித் பவருக்கும், காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் சரத் பவாருக்கும் மோதல் நடந்து வருகிறது.
பரம்பரை கோட்டை
மஹா.,வில் பாரமதி தொகுதி பவார் குடும்பத்தின் கோட்டையாக விளங்கி வருகிறது.இந்த தொகுதியை சரத் பவாரிடம் இருந்து கைப்பற்ற அஜித் பவார் தொடர்ந்து முயற்சித்து வருகிறார். லோக்சபா தேர்தலில் சரத் பவார் மகள் சுப்ரியா சுலேவை எதிர்த்து அஜித் பவார், தன் மனைவி சுனேத்ரா பவாரை களமிறக்கினார். ஆனால் சுப்ரியா சுலே, 1.5 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.
வேட்புமனு
அதே குடும்பத்தில் மோதல் இப்போது நடக்கும் சட்டசபை தேர்தலிலும் தொடர்கிறது.இந்த தேர்தலில், தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மாநில துணை முதல்வருமான அஜித் பவார், பாரமதி சட்டசபை தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அதேதொகுதியில் சரத் பவார் அணி சார்பில், அவரது குடும்பத்தைச் சேர்ந்த யுகேந்திர பவார் களம் இறக்கப்பட்டுள்ளார். இவர், துணை முதல்வர் அஜித் பவாரின் இளைய சகோதரர் சீனிவாஸ் பவாரின் மகன். சரத் பவாருக்கு பேரன் முறை உறவினர்.
நேருக்கு நேர் மோதல்
யுகேந்திர பவார் வேட்பு மனு தாக்கல் செய்தபோது அவருடன் சரத் பவார், பாரமதி எம்.பி., சுப்ரியா சுலே ஆகியோர் சென்றிருந்தனர். லோக்சபா தேர்தலைப் போலவே சட்டசபை தேர்தலிலும் பவார் குடும்பத்தினர் நேருக்கு நேர் மோதுவது, மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பை அதிகரித்துள்ளது.