மகளிர் பில்லியர்ட்ஸ் சாம்பியன் உமாதேவி சாதனைக்கு வயது தடையல்ல!
மகளிர் பில்லியர்ட்ஸ் சாம்பியன் உமாதேவி சாதனைக்கு வயது தடையல்ல!
ADDED : செப் 27, 2024 08:00 AM

சாதனைக்கு வயது தடையில்லை என்பதற்கு, தனது 47வது வயதில் பில்லியர்ட்ஸ் விளையாட்டில் 'உலக சாம்பியன்' பட்டம் பெற்று காட்டியுள்ளார் உமாதேவி.
பெங்களூரை சேர்ந்தவர் உமாதேவி, 59, பி.யு.சி., படித்தார். பள்ளி படிப்பு முடித்தவுடன், டைப்ரைட்டிங் பயிற்சி பெற்றார். பின், லால்பாக் பூங்காவில் உள்ள தோட்டக்கலை நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார்.
பணி காலத்தில், மாலை வேளையில், கர்நாடக அரசு செக்ரட்டரியேட் கிளப்பிற்கு சென்று, டேபிள் டென்னிஸ் விளையாட துவங்கினார். 1995 கால கட்டத்தில், ஒரு நாள் பணி முடிந்து கிளப்பிற்கு விளையாட சென்றார். ஏற்கனவே, அங்கு சிலர் விளையாடி கொண்டிருந்ததால், காத்திருந்தார்.
அப்போது அங்கு வந்த கிளப் செயலர் கிருஷ்ணகுமார், உமாதேவி கையில் பில்லியர்ட்ஸ் விளையாட்டில் பயன்படுத்தும் நீண்ட குச்சியை கொடுத்தார். இவ்விளையாட்டில் அவருக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. தினமும் அலுவலகம் முடிந்ததும் ஒரு மணி நேரம் பயிற்சி பெற்றார்.
ஒரு முறை, பில்லியர்ட்ஸ் போட்டியில் மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்றார். இதன் மூலம், கர்நாடக மாநில பில்லியர்ட்ஸ் சங்க உறுப்பினராக சேர்க்கப்பட்டார். இதனால், அவருக்கு உத்வேகம் ஏற்பட்டது.
பின் தேசிய பில்லியர்ட்ஸ், ஸ்னுாக்கர்ஸ் முன்னாள் சாம்பியன் அரவிந்த் சாவூர், தேசிய பில்லியர்ட்ஸ் அணியின் பயிற்சியாளர் ஜெய்ராஜு ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
முதன் முறையாக 2002ல் நடந்த தேசிய பில்லியர்ட்ஸ் போட்டியில், 47 வயதில் சாம்பியன் பட்டம் பெற்ற உமாதேவிக்கு, வெளிநாட்டில் நடந்த போட்டிகளில் பங்கேற்க வாய்ப்புகள் வந்தன. ஆனால், குடும்ப பொருளாதார சூழ்நிலையால், அவரால் செல்ல இயலவில்லை.
இவரது கணவர் நாகராஜ், சிலரிடம் நிதியுதவி பெற்று, மனைவி வெளிநாடு செல்ல உதவினார்.
தன் வளர்ச்சிக்கு குடும்பத்தினர் உறுதுணையாக இருந்தனர்; அவர்களின் ஆதரவால் தான், தன்னால் சாதிக்க முடிந்தது என பெருமையுடன் உமாதேவி கூறினார்.
உலக சாம்பியன்ஷிப் - 2011 போட்டியில் பங்கேற்ற அவர், மூன்றாவது இடத்தை பிடித்தார். வெற்றியோ, தோல்வியோ, இரண்டையும் சமமாக பாவித்தார்.
அடுத்தாண்டு 2012 லண்டனில் நடந்த போட்டியில், 'உலக மகளிர் பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னுாக்கர் தங்க பட்டத்தை' வென்றார்.
பில்லியர்ட்ஸ் விளையாடும் உமாதேவி.
- நமது நிருபர் -

