விவசாய கடன் அட்டை வரம்பு உயர்வு பருப்பு நேரடி கொள்முதல்
விவசாய கடன் அட்டை வரம்பு உயர்வு பருப்பு நேரடி கொள்முதல்
ADDED : பிப் 01, 2025 11:13 PM

கிசான் கிரெடிட் கார்டுக்கான உச்ச வரம்பு, 3 லட்சம் ரூபாயில் இருந்து, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 7.7 கோடி விவசாயிகள் பயன்பெறுவர்.
நாடு முழுதும், வேளாண் உற்பத்தியில் மிகவும் பின்தங்கியிருக்கும் அல்லது குறைவாக இருக்கும், 100 மாவட்டங்களில் உற்பத்தியை அதிகரிக்கவும், வேகப்படுத்தவும், 'பிரதமர் தன்தானிய கிருஷி திட்டம்' அறிமுகம் செய்யப்படுகிறது. மாநில அரசுகளுடன் இணைந்து, இந்த மாவட்டங்களில், வேளாண் உற்பத்தியை அதிகரிப்பது, பலதரப்பட்ட பயிர்கள் பயிரிடுவது, உற்பத்தி பொருட்களை பாதுகாப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.
கிராமங்களில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. கிராமப்புற பெண்கள், இளைஞர்கள், இளம் விவசாயிகள், நிலமில்லா விவசாயிகள் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட உள்ளனர்.
பருப்பு வகைகள் உற்பத்தியில் சுயசார்பு நிலையை எட்டும் நோக்கோடு செயல்படும் இயக்கம், மேலும் ஆறு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது.
குறிப்பாக, துவரை, உளுந்து மற்றும் மசூர் பருப்புகள் உற்பத்தியை அதிகரிக்க முன்னுரிமை கொடுக்கப்படும். இந்த திட்டத்தின் வாயிலாக, நாபெட், என்.சி.சி.எப்., போன்ற கூட்டுறவு அமைப்புகள், விவசாயிகளுடன் நேரடியாக ஒப்பந்தம் செய்து, பருப்பு வகைகளை கொள்முதல் செய்யும்.
பீஹாரில் அதிகளவில் உற்பத்தி செய்யப்படும், மகானா எனப்படும் தாமரை விதை துறைக்கென தனி வாரியம் அமைக்கப்பட உள்ளது. இதன் வாயிலாக, தாமரை விதை உற்பத்தி தொடர்பான பயிற்சிகள் அளிப்பதுடன், அரசின் மானிய திட்டங்கள் இந்தத் துறையினருக்கும் கிடைக்கும்.
அதிக மகசூல் தரும் விதைகளுக்கான தேசிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
பருத்தி உற்பத்தியை அதிகரிக்க ஐந்தாண்டு திட்டம் அறிவிக்கப்படுகிறது.