இந்திய பெருங்கடலில் விவசாய நிலம்? பீஹாரில் வேளாண் அதிகாரிகள் 'ஷாக்'
இந்திய பெருங்கடலில் விவசாய நிலம்? பீஹாரில் வேளாண் அதிகாரிகள் 'ஷாக்'
ADDED : ஜன 29, 2025 01:38 AM
அரா,பீஹாரில், வேளாண் துறை அதிகாரிகள் பயிர்களுக்கான கள ஆய்வு நடத்திக் கொண்டிருந்தபோது, சில விவசாய நிலங்கள் இந்தியப் பெருங்கடலுக்குள் இருப்பதாக, 'மொபைல் போன்' செயலியில் தகவல் வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இம்மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள விவசாய விளை நிலங்கள், அதில் விதைக்கப்பட்டுள்ள பயிர்கள் குறித்து, வேளாண் துறை அதிகாரிகள் கள ஆய்வு நடத்துவது வழக்கம்.
பல்வேறு சீசன்களில் என்னென்ன பயிர்கள் விதைக்கப்பட்டன, அதன் வரத்து எவ்வளவு இருக்கும் என்பதை அறிய, இந்த கள ஆய்வு உதவியாக உள்ளது.
மேலும், விவசாய விளைபொருட்களுக்கான விற்பனை, இயற்கை சீற்றங்கள் ஏற்படும் போது, விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய காப்பீடு குறித்து, முன்கூட்டியே கணிக்க இந்த ஆய்வு உதவுகிறது. அந்த வகையில், பீஹாரில் 1.15 லட்சம் விவசாய நிலங்களில் பயிர் ஆய்வு இதுவரை நடத்தப்பட்டுள்ளது. 300 அதிகாரிகள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.
டி.சி.எஸ்., எனப்படும், 'டிஜிட்டல் கிராப் சர்வே' என்ற மொபைல் போன் செயலியை அதிகாரிகள் தங்கள் மொபைல் போன்களில் தரவிறக்கம் செய்து, அதில் காட்டப்படும் தரவுகளின் அடிப்படையில் நிலங்களுக்கு சென்று ஆய்வு செய்கின்றனர்.
இந்நிலையில், பீஹாரின் போஜ்புர் மாவட்டத்தின் ஜன்கல் மஹல் பஞ்சாயத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, சில விவசாய நிலங்கள் இந்தியப் பெருங்கடலுக்குள், 6,500 கி.மீ., தொலைவில் அமைந்திருப்பதாக செயலியில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதைப் பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக தொழில்நுட்ப பிரிவினர் அதிகாரிகளின் மொபைல் போன்களை ஆய்வு செய்தபோது, அதில் சில தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. அதை சரி செய்த பின் ஆய்வுப் பணிகள் தொடர்ந்தன.

