விவசாய விஞ்ஞானி தற்கொலை? ஆற்றில் சடலமாக கண்டுபிடிப்பு
விவசாய விஞ்ஞானி தற்கொலை? ஆற்றில் சடலமாக கண்டுபிடிப்பு
ADDED : மே 12, 2025 01:09 AM

மாண்டியா: கர்நாடகாவில், பிரபல விவசாய விஞ்ஞானியும், இந்திய விவசாய ஆய்வு வாரியத்தின் ஓய்வு பெற்ற இயக்குநருமான சுப்பண்ணா அய்யப்பன், ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.
கர்நாடக மாநிலம், மைசூரில் வசித்தவர் சுப்பண்ணா அய்யப்பன், 70. இவர் பெங்களூரு விவசாய பல்கலைக்கழகத்தில், பிஎச்.டி., பட்டம் பெற்றவர். விவசாயம் மற்றும் மீன்வள விஞ்ஞானியாக டில்லி, மும்பை, போபால் மற்றும் பெங்களூரில் பணியாற்றியவர்.
'டிபார்ட்மென்ட் ஆப் அக்ரிகல்சுரல் ரிசர்ச் அண்டு எஜுகேஷன்' செயலராகவும், இந்திய விவசாய ஆய்வு ஆணைய நிர்வாக இயக்குநராகவும், தேசிய விவசாய அறிவியல் அகாடமி தலைவராகவும் பணியாற்றியவர். விவசாயம் மற்றும் ஆராய்ச்சியில் சிறப்பாக பணியாற்றிய இவர், 'பத்மஸ்ரீ' உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.
பணியில் இருந்து ஓய்வு பெற்ற சுப்பண்ணா அய்யப்பன், தன் மனைவியுடன் வசித்து வந்தார். இவர் மைசூரின் ராமகிருஷ்ணா ஆசிரமம், ஸ்ரீரங்கப்பட்டணா காவிரி ஆற்றங்கரைக்கு தியானம் செய்ய செல்வது வழக்கம்.கடந்த 7ம் தேதி வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை.
மொபைல் போனையும் வீட்டிலேயே விட்டு சென்றுள்ளார்.
பல இடங்களில் தேடியும் கிடைக்காமல், போலீசில் அவரது குடும்பத்தினர் புகார் செய்தனர்.
கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது, மைசூரு - பெங்களூரு சாலை ஜங்ஷனில், சுப்பண்ணா அய்யப்பன் ஸ்கூட்டரில் சென்றது தெரிந்தது.
இது குறித்து, ஸ்ரீரங்கப்பட்டணா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விசாரித்து, சாய்பாபா ஆசிரமம் அருகில், காவிரி ஆற்றங்கரையில் ஸ்கூட்டரை கண்டுபிடித்தனர். அதன்பின் காவிரி ஆற்றில் தேட துவங்கினர்.
நேற்று காலை சுப்பண்ணா அய்யப்பன் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. 'ஆற்றில் குதித்து அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம்' என, போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

