பயங்கரவாத மூளைசலவையை தடுக்க ஏ.ஐ., உதவியுடன் கண்காணிப்பு மையம்
பயங்கரவாத மூளைசலவையை தடுக்க ஏ.ஐ., உதவியுடன் கண்காணிப்பு மையம்
UPDATED : நவ 16, 2026 09:36 PM
ADDED : நவ 16, 2026 09:34 PM
புதுடில்லி: இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் இளைஞர்களை மூளைச்சலவை செய்து, பயங்கரவாத செயலுக்கு இழுப்பதை தடுக்க, ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய தேசிய கண்காணிப்பு மையத்தை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்பின் சார்பில் பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு டில்லியில் வரும் 19, 20 ஆகிய தேதிகளில் நடக்க உள்ளது. இந்த மாநாட்டில், உள்நாட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் எல்லைப்புற பாதுகாப்பு, பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத கும்பல்கள், போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
இதற்காக, ஐந்து ஆண்டுகால தேசிய பயங்கரவாத எதிர்ப்புத் திட்டத்தின் கீழ் பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, இணையதளங்கள், ரகசிய செயலிகள், சமூக ஊடகங்களில் பரவும் பயங்கரவாதக் கருத்துகளைக் கண்காணிக்க தேசிய பயங்கரவாத கண்காணிப்பு பகுப்பாய்வு மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது, ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் உதவியுடன் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளையும், மூளைச்சலவை முயற்சிகளையும் நிகழ்நேரத்தில் துல்லியமாக கண்டறிய உதவும் எனக் கூறப்படுகிறது. இதேபோல் மத்திய உளவு அமைப்புகள் மற்றும் தேசிய கண்காணிப்பு மையம் அளிக்கும் தகவல்களின்படி உடனடி நடவடிக்கை எடுக்க, அனைத்து மாநிலங்களிலும் பிரத்யேக பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவுகள் உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளன.
இதற்காக, அடிமட்ட அளவில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த, நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட கலெக்டர், எஸ்.பி., ஆகியோர் தலைமையில் சிறப்பு மாவட்டக் குழுக்கள் அமைக்கப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
இத்திட்டத்தின்கீழ், தவறான பாதைக்குச் செல்லும் இளைஞர்களை, ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிந்து, அவர்களுக்கு உரிய உளவியல் ஆலோசனைகள் வழங்கி நல்வழிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
