ADDED : செப் 26, 2025 12:28 AM

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில், ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதியுடன் கூடிய பக்தர்களுக்கான ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று திறந்து வைத்தார்.
ஆந்திர மாநிலம், திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் சராசரியாக 50,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகின்றனர். பண்டிகைகள், விடுமுறை நாட்கள் போன்ற சமயங்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.
பக்தர்களின் தரிசன அனுபவத்தை மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், நாட்டிலேயே முதன் முறையாக கோவிலில் ஏ.ஐ., தொழில்நுட்பத்துடன் கூடிய ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தை அமைத்துள்ளனர்.
இது, கூட்ட நெரிசலை முன்கூட்டியே கணிக்கும்; பக்தர்கள் வரிசைகளை வேகமாக்கும் அதிகாரிகளால் உடனடியாக தகவல்களை அணுக முடியும்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று நடந்த நிகழ்ச்சியில் இந்த மையத்தை துவக்கி வைத்தார். வைகுண்டம் க்யூ காம்பிளக்ஸ் - 1-ல் அமைந்துள்ள இந்த மையம், நவீன கேமராக்கள், முப்பரிமாண வரைபடம், நேரடி டிஜிட்டல் தகவல் திரை ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டு, தொழில்நுட்ப நிபுணர் குழுவால் நிர்வகிக்கப்பட உள்ளது.
இது குறித்து அரசு வெளியிட்ட அறிக்கையில், 'முதல்வர் சந்திரபாபு நாயுடு, திருமலையில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை திறந்து வைத்தார். 6,000-க்கும் மேற்பட்ட செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் திருமலையை கண்காணிக்கின்றன. இந்த அமைப்பு நிமிடத்திற்கு 3.6 லட்சம் தரவுகளை அளிக்கும்' என கூறப்பட்டுள்ளது.
முன்னதாக திருப்பதி வந்த துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உடன் இணைந்து சுவாமி தரிசனம் செய்தார். மேலும், 102 கோடி ரூபாய் செலவில், 4,000 பக்தர்கள் தங்கும் வகையில் கட்டப்பட்ட புதிய மண்டபத்தை இருவரும் இணைந்து திறந்து வைத்தனர்.