விதிமீறல் கண்டறிய ஏ.ஐ., ட்ரோன் கேமரா! கேரள அரசுக்கு போக்குவரத்து துறை பரிந்துரை
விதிமீறல் கண்டறிய ஏ.ஐ., ட்ரோன் கேமரா! கேரள அரசுக்கு போக்குவரத்து துறை பரிந்துரை
ADDED : பிப் 15, 2024 09:05 PM
பாலக்காடு:கேரள மாநிலத்தில், போக்குவரத்து விதிமீறல்களை கண்டறிய, செயற்கை நுண்ணறிவு ட்ரோன் கேமராக்கள் அமைக்க திட்டமிட்டுள்ளது.
கேரள மாநிலத்தில், முக்கிய சாலைகளில் போக்குவரத்து விதிமீறல்களை கண்டறிய செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் பொருத்தப்பட்டாலும், சாலை விபத்துகள் குறையவில்லை என்று போக்குவரத்து துறை அரசுக்கு அளித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், வாகன விபத்தை கட்டுப்படுத்த, செயற்கை நுண்ணறிவு ட்ரோன் கேமராக்கள் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தலாம் என, அரசுக்கு வழங்கியுள்ள அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
விபத்துக்களில் உயிரிழப்பு எண்ணிக்கை குறைந்தாலும், விபத்து எண்ணிக்கை முன்பை விட அதிகரித்துள்ளது எனவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
போக்குவரத்து துறையின் அறிக்கையில் கூறியிருப்பது:
கேரள மாநிலத்தில், கடந்த ஆண்டு, 48,141 விபத்துகள் ஏற்பட்டுள்ளது. 2022ல் இது, 43,310, 2021ல் 33,296 என இருந்தது.
முந்தைய ஆண்டுகளை ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு 4,321 விபத்துகள் அதிகரித்துள்ளது. இதை தவிர, தினமும் சுமார், 131 விபத்துக்கள் பதிவு செய்கின்றன.
2023ல், 4,010 பேர் விபத்தில் இறந்துள்ளனர். 2022ல் 4,317 பேரும்; 2021ல், 3,429 பேரும் பலியாகி உள்ளனர். அதே நேரத்தில், முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு பலி எண்ணிக்கையில், 307 குறைந்துள்ளது.
அதே நேரத்தில், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை குறையவில்லை. 2021ல் 40,204 பேரும்; 2022ல் 49,307 பேரும் காயமடைந்துள்ளனர். கடந்தாண்டு காயம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 54,369 ஆக உயர்ந்தது. கடந்த ஆண்டு 5,062 பேர் கூடுதலாக காயமடைந்துள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு கேமரா கண்காணிப்பு வளையத்தில் இல்லாத பகுதிகளில், விபத்தை விளைவிக்கும் வாகனங்கள் கண்டறிய மோட்டார் வாகனத் துறையினர் திணறுகின்றனர்.
இந்நிலையில், போக்குவரத்து சோதனையை மேலும் திறம்பட செய்ய செயற்கை நுண்ணறிவு ட்ரோன் கேமராக்கள் செயல்படுத்த துறை திட்டமிட்டுள்ளனர். இதற்காக, 200க்கும் மேற்பட்ட கேமராக்கள் வாங்குவதற்கான அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.
தற்போது 'இன்டர்செப்ட்' என்று அழைக்கப்படும் வேகம் கண்டறிதல் வாகனங்களை, போலீஸ் மற்றும் போக்குவரத்து துறையினர் பயன்படுத்துகின்றனர்.
இதற்கு பதிலாக, இந்த செயற்கை நுண்ணறிவு ட்ரோன் திட்டம் அமலுக்கு வந்தால், மாவட்டத்தின் எந்த பகுதியில் இருந்தும் ட்ரோன் கேமராக்களை இயக்கலாம்.
ஒரு ட்ரோன் கேமராவை பயன்படுத்தி, 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள போக்குவரத்து விதிமீறல்களை கண்டறியலாம். செயற்கை நுண்ணறிவு குழுவின் ஒத்துழைப்பும் இத்திட்டத்திற்கு தேவைப்படும்.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.