எஸ்ஐஆர் பணியில் ஏஐ மூலம் குளறுபடி: தேர்தல் கமிஷனுக்கு மம்தா 5வது கடிதம்
எஸ்ஐஆர் பணியில் ஏஐ மூலம் குளறுபடி: தேர்தல் கமிஷனுக்கு மம்தா 5வது கடிதம்
ADDED : ஜன 12, 2026 09:06 PM

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆர் பணிகளில் குளறுபடி நடந்ததாக தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் அம்மாநில முதல்வர் மம்தா, இது தொடர்பாக தேர்தல் கமிஷனுக்கு 5வது முறையாக கடிதம் எழுதியுள்ளார்.
இன்று(ஜனவரி 12) எழுதிய கடிதத்தில் மம்தா கூறியுள்ளதாவது: எஸ்ஐஆர் பணிகள் அடிப்படையிலேயே குறைபாடு உடையது. 2002 ம் ஆண்டு வாக்காளர் பட்டியல்களை செயற்கை நுண்ணறிவு மூலம் டிஜிட்டல்மயமாக்குவதால், பெரியளவில் தரவுகள் பொருந்தாத நிலை உருவாக்கி உள்ளதுடன், உண்மையான வாக்காளர்கள் விவரத்திலும் முரண்பாடு உள்ளதாக வகைப்படுத்துவதற்கும் வழிவகுக்கிறது. இத்தகைய அணுகுமுறை, தன்னிச்சையானது, நியாயமற்றது மற்றும் அரசியலமைப்பின் உணர்வுகளுக்கு முரணானது.
எஸ்ஐஆர் பணிகளின் போது அளிக்கப்பட்ட ஆவணங்களுக்கு எந்தவித முறையான அங்கீகாரமும் அளிக்கப்படவில்லை. இதனால், அடிப்படையிலேயே குறைபாடு உள்ளது. எஸ்ஐஆர் பணியானது, முற்றிலும் தொழில்நுட்ப தரவுகளால் நடைமுறைப்படுத்தப்பட்டது. சிந்தனை,உணர்திறன் மற்றும் மனிதநேயம் ஆகியவை முற்றிலும் இல்லை. இது நமது ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு கட்டமைப்பின் அடித்தளத்தையே பலவீனப்படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

