அசாம் பள்ளியில் 'ஏஐ' தொழில்நுட்ப ஆசிரியர்: மாணவர்கள் உற்சாகம்
அசாம் பள்ளியில் 'ஏஐ' தொழில்நுட்ப ஆசிரியர்: மாணவர்கள் உற்சாகம்
ADDED : மே 31, 2024 06:19 PM

கவுகாத்தி: அசாமில் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்ட, செயற்கை நுண்ணறிவு(ஏஐ) ஆசிரியர், மாணவர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது. வடகிழக்கு மாநிலங்களில் உருவாக்கப்பட்ட முதல் ஏஐ ஆசிரியர் என்ற பெருமை இந்த ரோபோவுக்கு கிடைத்துள்ளது. மாணவர்கள் எந்த பாடம் தொடர்பாக கேள்வி கேட்டாலும், அதற்கு தகுந்த உதாரணங்களுடன் பதில் அளித்து வருகிறது.
அசாமின் பாரம்பரிய உடை மற்றும் நகை அணிந்தபடி இருக்கும் செயற்கை நுண்ணறிவு ஆசிரியருக்கு ‛ஐரீஸ்' என பெயர் சூட்டப்பட்டு உள்ளது. குரல் உதவி செயலி (வாய்ஸ் அசிஸ்டன்ட்) மூலம் மாணவர்களின் கேள்விகளை புரிந்து கொண்டு, அதற்கு ஏற்ற விடையை தக்க உதாரணங்களுடன் ‛ஐரீஸ்' அளித்து வருகிறது. இதனால், உற்சாகமடைந்த மாணவர்கள், ஆசிரியருடன் கைகுலுக்கி மகிழ்கின்றனர். இதன் மூலம் அவர்களின் கற்றல் திறன் அதிகரிப்பதாக பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது.
இது தொடர்பாக பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், பாடத்திட்டம் அல்லது வேறு எதாவது குறித்து மாணவர்கள் எழுப்பும் கேள்விக்கு, ‛ஐரீஸ்' உடனடியாக உரிய விளக்கம் மற்றும் எடுத்துக்காட்டுகளுடன் விடைகளை அளித்து வருகிறது. இதனால், செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோ ஆசிரியரின் பல்வேறு செயல்பாடுகளை மாணவர்கள் ஆர்வத்துடன் தெரிந்து வைத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
நிடி ஆயோக்கின் திட்டமான அடல் திங்கரிங் லேப் திட்டம் மூலம் மேகர்லாப்ஸ் கல்வி அமைப்புடன் இணைந்து இந்த செயற்கை நுண்ணறிவு ஆசிரியர் உருவாக்கப்பட்டு உள்ளது.