கேரள உள்ளாட்சித்தேர்தலில் அ.தி.மு.க., தோல்வி; தமிழக தேர்தல் பொறுப்பாளர்கள் மீது அதிருப்தி
கேரள உள்ளாட்சித்தேர்தலில் அ.தி.மு.க., தோல்வி; தமிழக தேர்தல் பொறுப்பாளர்கள் மீது அதிருப்தி
UPDATED : டிச 15, 2025 05:03 AM
ADDED : டிச 15, 2025 02:37 AM

மூணாறு: கேரளாவில் நடந்த உள்ளாட்சித்தேர்தலில் அ.தி.மு.க., படுதோல்வி அடைந்ததற்கு தேர்தல் பணிக்கு வந்த தமிழக பொறுப்பாளர்கள் 'போட்டோ ஷூட்' நடத்தி சுற்றுலா வந்தது போல் செயல்பட்டதாக அக்கட்சியின் வேட்பாளர்கள் புலம்பி வருகின்றனர். தேர்தல் பொறுப்பாளர்கள் மீது கடும் அதிருப்தியிலும் உள்ளனர்.
கேரளாவில் டிச., 9, 11 ல் உள்ளாட்சித்தேர்தல் நடந்தது. இடுக்கி, பாலக்காடு, திருவனந்தபுரம் மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளில் 28 வார்டுகளில் அ.தி.மு.க., போட்டியிட்டது.
இடுக்கி மாவட்டத்தில் மறையூர், மூணாறு, தேவிகுளம், வட்டவடை, சின்னக்கானல், குமுளி, பீர்மேடு ஆகிய ஊராட்சிகள், தேவிகுளம் ஊராட்சி ஒன்றியம், இடுக்கி மாவட்ட ஊராட்சி ஆகியவற்றில் ஒரு சில வார்டுகளில் அ.தி.மு.க., போட்டியிட்டது.
இவற்றில் தேர்தல் பணி செய்வதற்கு நிர்வாகி பொள்ளாச்சி ஜெயராமன், எம்.எல்.ஏ.,க்கள் ஆனந்தன், மகேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரை அ.தி.மு.க., தலைமை நியமித்தது.
அவர்கள் தலைமையில் தேர்தல் பணிபுரிய வந்தவர்கள் சரிவர பணிகளை செய்யவில்லை என்றும், மூணாறு, தேவிகுளம் ஊராட்சிகளின் பொறுப்பாளர்கள் ஒரு சில வாக்காளர்களிடம் 'நோட்டீஸ்' கொடுத்து, அதனை அலைபேசிகளில் படம் பிடித்து 'போட்டோ ஷூட்' நடத்தியதுடன் சுற்றுலா வந்தது போன்று செயல்பட்டதாகவும், அக்கட்சி வேட்பாளர்கள் புலம்பி வருகின்றனர். அதனால் ஓட்டுகள் கிடைக்கவில்லை என கட்சியினர் கூறியுள்ளதுடன் பொறுப்பாளர்கள் மீது அதிருப்தியிலும் உள்ளனர்.
தேர்தலில் கிடைத்த ஓட்டுகள் l மூணாறு ஊராட்சி: 13ம் வார்டு பவுன்ராஜ் 62, 18ம் வார்டு முருகன் 2 ஓட்டுகள் பெற்றனர்.
* தேவிகுளம் ஊராட்சி: 14ம் வார்டு முருகையா 16, 15ம் வார்டு கிட்னம்மா 18 ஓட்டுகள் பெற்றனர்.
* தேவிகுளம் ஊராட்சி ஒன்றியம்: 1ம் வார்டு ( மறையூர்) சாந்தகுமார் 145, 3ம் வார்டு (காந்தலூர்) சுரேஷ் 51 ஓட்டுகள் பெற்றனர்.

