காற்று மாசால் 'வைட்டமின் டி' குறைபாடு எய்ம்ஸ் மருத்துவமனை எச்சரிக்கை
காற்று மாசால் 'வைட்டமின் டி' குறைபாடு எய்ம்ஸ் மருத்துவமனை எச்சரிக்கை
ADDED : நவ 27, 2024 10:30 PM
புதுடில்லி:அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக, டில்லிவாசிகள் தங்கள் உடலில் 'வைட்டமின் டி' அளவை பராமரிக்க வேண்டும் என டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிவுறுதியுள்ளது.
தலைநகர் டில்லியில் காற்று மாசு அபாய கட்டத்திலும், மிக மோசமான நிலையிலும் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. காற்று மாசு காரணமாக டில்லி மக்கள் பல்வேற்று உடல் உபாதைகளால் அவதிப்படுகின்றனர்.
குறிப்பாக, குழந்தைகளும் முதியோர்களும் சுவாசப் பிரச்னை ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
இந்நிலையில், டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் உட்சுரப்பியல் மற்றும் வளர்சிதை மாற்ற துறை பேராசிரியரும், மூத்த டாக்டருமான ரவீந்தர் கோஸ்வாமி கூறியதாவது:
காற்று மாசு காரணமாக சூரிய ஒளி நம் மீது படுவது வெகுவாக குறைந்து விட்டது. இதனால், நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தின் சக்திவாய்ந்த ஆதாரமான வைட்டமின் டி கிடைக்காமல் உடலில் பற்றாக்குறை ஏற்படும். எனவே, அனைத்து வயதினரும் மருத்துவர் ஆலோசனைப்படி குளிர்காலத்தில் அதற்கான மாத்திரைகள் சாட்பிடலாம். அதேநேரத்தில் சிறுநீரக நோய்களுக்கான கால்சிட்ரியால் போன்றவற்றை எடுத்துக் கொள்ளக்கூடாது. கொல்கால் சிபெரால் நல்லது.
தெருவோர வியாபாரிகள், பெட்ரோல் நிலையங்களில் பணிபுரிவோர், ஆட்டோ டிரைவர்கள், டிராபிக் போலீசார், தோட்டக்காரர்கள் போன்ற பொதுவெளியில் வேலை செய்வோர் 'வைட்டமின் டி' யை பராமரிப்பது மிகவும் அவசியம். காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை வெயிலில் இருப்போருக்கு வைட்டமின் டி குறைபாடு வராது. வீட்டுக்குள்ளேயே இருப்போர், அலுவலகத்துக்குள் வேலை செய்வோர் அதற்குரிய மாத்திரை சாப்பிடலாம். அனைத்து வயதினருக்கும் வைட்டமின் டி ஒரு மில்லிக்கு 20 நானோகிராம் போதுமானது.
இவ்வாறு அவர் கூறினார்.
நாளமில்லா சுரப்பி மற்றும் வளர்சிதை மாற்றத் துறை ஆராய்ச்சியாளரும் மூத்த டாக்டருமான சோமா சாஹா கூறியதாவது:
கட்டுமானத் தொழிலாளர்கள் வெயிலிலேயே வேலை செய்வதால் வைட்டமின் டி குறைபாடு இல்லை. ஆனால், அலுவலகத்துக்குள் வேலை செய்வோருக்கு வைட்டமின் டி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அவர்கள் உணவில் கவனம் செலுத்த வேண்டும். அலுவலக ஊழியர்கள், வீட்டுக்குள்ளேயே இருப்போருக்குத்தான் சிறுநீரகக் கோளாறு, இரைப்பைக் கோளாறு, காசநோய் மற்றும் வலிப்பு ஆகியவை ஏற்படுகிறது.
குடல் லுமினல் செல்களில் கால்சியம் டிரான்ஸ்போர்ட்டர்களின் தொகுப்புக்கு வைட்டமின் டி தேவைப்படுகிறது. எனவே, இது குடலில் உள்ள உணவு கால்சியத்தை உறிஞ்ச உதவுகிறது. பாஸ்பரஸுடன் சீரம் கால்சியம் எலும்பை கனிமமாக்குகிறது.
வைட்டமின் டி பற்றாக்குறை ஏற்பட்டால் எலும்பு வலி, தசை வலி, நடை தள்ளாடுதல் ஆகிய அறிகுறியால் தெரிந்து கொள்ளலாம். எனவே, டாக்டரின் ஆலோசனைப்படி வைட்டமின் டி மாத்திரை எடுத்துக் கொள்ளும் அதேநேரத்தில், அவர் பரிந்துரைக்கும் உணவுப் பழக்கத்தையும் கடைப்பிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
காற்றின் தரம் 303
தலைநகர் டில்லியில் நான்காவது நாளாக நேற்றும் மிகவும் மோசமான நிலையில் காற்றின் தரக் குறியீடு பதிவாகி இருந்தது. நேற்று மாலை 4:00 மணிக்கு காற்றின் தரக்குறியீடு 303 ஆக இருந்தது. இதுவே நேற்று முன் தினம் 343ஆக பதிவாகியிருந்தது.
கடந்த 20ம் தேதி 419, 21ம் தேதி 371, 22ம் தேதி 393, 23ம் தேதி 412, 24ம் தேதி 318 என காற்றின் தரக்குறியீடு பதிவாகி இருந்தது.