'பாராசூட்' பயிற்சியில் சிக்கல் விமானப்படை வீரர் பலி
'பாராசூட்' பயிற்சியில் சிக்கல் விமானப்படை வீரர் பலி
ADDED : பிப் 09, 2025 06:54 AM

உத்தர பிரதேச மாநிலம், ஆக்ராவில் பாராசூட் பயிற்சியின்போது, கர்நாடக மாநிலம், ஷிவமொக்காவை சேர்ந்த விமானப்படை வீரர் மரணடைந்தார்.
ஷிவமொக்கா மாவட்டம், ஹொசநகர் சங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சுரேஷ் - நாகரத்னா தம்பதி. இவர்களின் மகன் மஞ்சுநாத், 35. பி.யூ.சி., முடித்த மஞ்சுநாத், விமானப்படையில் சேர்ந்து, ஜூனியர் வாரண்ட் அதிகாரியாக பணியாற்றினார்.
தற்போது உத்தர பிரதேச மாநிலம், ஆக்ராவில் வேலை செய்து வந்தார். வழக்கம் போல், நேற்று முன்தினம் காலை 8:30 மணிக்கு பயிற்சி பள்ளியில் இருந்து, மஞ்சுநாத் உட்பட 12 பேர் சென்றனர். விமானத்தில் இருந்து 12 பேரும் குதித்தனர். ஆனால், 11 பேர் மட்டுமே தரையிறங்கினர்.
மற்றொருவர் குறித்த தகவல் கிடைக்கவில்லை. உடனடியாக விமானப்படை அதிகாரிகள் தீவிர தேடுதலில் இறங்கினர். மல்புரா போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில், கோதுமை விளைவிக்கப்பட்டிருந்த விவசாய நிலத்தில் மஞ்சுநாத் படுகாயத்துடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். உடனடியாக அவரை மீட்டு, விமானப்படை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுதொடர்பாக பாராசூட் ரெஜிமென்ட் மூத்த அதிகாரி கூறுகையில், 'பயிற்சியின்போது, பாராசூட் வீரர்கள் வழக்கமாக இரண்டு பாராசூட்களை அணிந்து கொள்வர். ஒரு பாராசூட், விமானத்தில் இருந்து குதிக்கும்போது 1,500 அடி உயரத்தில் தானாகவே விரிந்து கொள்ளும். மற்றொரு பாராசூட் நம் கையை பயன்படுத்தி, பாராசூட் பேக்கை திறக்க வேண்டும். ஒருவேளை முதல் பாராசூட் அறுந்துவிட்டால், மற்றொரு பாராசூட் திறக்கும்போது, பின்னிக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது.
'தற்போது ஜூனியர் வாரண்ட் அதிகாரி இறப்பு மிகவும் அரிதாக நிகழ்ந்துள்ளது. எதனால் பாராசூட் விரியவில்லை என்பது குறித்து விமானப்படை நிபுணர்கள் விசாரிப்பர்' என்றார்.
இது தொடர்பாக ஷிவமொக்காவில் உள்ள குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல் இங்கு கொண்டு வர அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. - நமது நிருபர் -

