ADDED : ஆக 05, 2026 07:03 PM

புதுடில்லி: ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) மற்றும் மேலாண் இயக்குனராக டுவால்ட் ஜெபமேரியம் நியமிக்கப்பட்டுள்ளார். அவர், அதற்கு முன்னர் எத்தியோப்பியன் ஏர்லைன்சின் சிஇஓ ஆக பணியாற்றிய அனுபவம் உள்ளது.
பொதுத்துறை நிறுவனமாக இருந்த ஏர் இந்தியா டாடா நிறுவனம் ஏலத்தில் எடுத்தது. இதனைத் தொடர்ந்து 2022ம் ஆண்டு ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக கேம்ப்பெல் வில்சன் நியமனம் செய்யப்பட்டார். 2027 ம் ஆண்டு வரை அவரது பதவிக்காலம் இருந்தது.
கடந்தாண்டு ஆமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 241 பேர் உயிரிழந்த விவகாரத்தில் அவருக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனையடுத்து கேம்ப்பெல் வில்சன் கடந்த ஏப்ரல் மாதம் பதவியை ராஜினாமா செய்தார். புதிய சிஇஓ நியமிக்கப்படும் வரை பதவியில் தொடர்வார் என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்து இருந்தது.
இந்நிலையில், ஏர் இந்தியாவின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மேலாண் இயக்குனர் ஆக டுவால்ட் ஜெபமேரியம் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் எத்தியோப்பியா ஏர்லைன்சின் தலைமை நிர்வாக அதிகாரியாக இதற்கு முன்னர் பணியாற்றி உள்ளார்.
