ADDED : மே 16, 2024 09:51 PM
புதுடில்லி:வதோதரா செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக எழுதப்பட்டிருந்த ஒரு காகிதத்தால் நேற்று முன்தினம் பரபரப்பு ஏற்பட்டது.
டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வதோதரா செல்வதற்காக நேற்று முன் தினம் இரவு ஏர் இந்தியா விமானம் தயார் நிலையில் இருந்தது.
அப்போது விமான நிலையத்தில் கைதுடைக்கும் ஒரு காகிதத்தில், வதோதரா செல்லும் விமானத்தின் கழிப்பறையில் வெடிகுண்டு என்று எழுதப்பட்டு இருந்தது. உடனடியாக இதுகுறித்து பாதுகாப்புப் படையினருக்கும் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கும் டில்லி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டனர். விமானம் தனி பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு, முழுவதும் சோதனை செய்யப்பட்டது. சந்தேகப்படும் வகையில் எந்தப் பொருளும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
எனினும் பிறகு மீண்டும் அனைவரும் வேறொரு விமானத்தில் நேற்று காலை வதோதரா அனுப்பப்பட்டனர்.
