82 வயது மூதாட்டிக்கு வீல் சேர் தரவில்லை: குற்றச்சாட்டுக்கு ஏர் இந்தியா மறுப்பு
82 வயது மூதாட்டிக்கு வீல் சேர் தரவில்லை: குற்றச்சாட்டுக்கு ஏர் இந்தியா மறுப்பு
UPDATED : மார் 08, 2025 04:36 PM
ADDED : மார் 08, 2025 04:33 PM

புதுடில்லி: விமான பயணம் மேற்கொண்ட மூதாட்டிக்கு வீல் சேர் தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டை ஏர் இந்தியா மறுத்துள்ளது.
கடந்த மார்ச் 4ம் தேதி டில்லியில் இருந்து பெங்களூரு செல்லும் ஏர் இந்தியா விமானத்தில், முன்பதிவு செய்யப்பட்ட வீல் சேர் மறுக்கப்பட்டதால், 82 வயது மூதாட்டி ஒருவர் தவறி விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஒரு மணி நேரம் காத்திருந்தும் சக்கர நாற்காலி தரப்படாததால், குடும்பத்தினர் உதவியுடன் நடந்து சென்றபோது அந்த மூதாட்டி தவறி விழுந்து தலையில் அடைந்தார்.
மூதாட்டியின் கணவர் ராணுவ லெப்டினன்ட் ஜெனரலாக இருந்தவர். இந்த சம்பவம் தொடர்பாக மூதாட்டியின் பேத்தி பருல் சமூக வலைதளத்தில் பிரச்னை குறித்து பதிவிட்டார்.
அந்த பதிவிற்கு ஏர் இந்தியா விமானம் பதிலளித்து கூறியதாவது:
எந்த நிலையிலும் வீல்சேர் மறுக்கப்படவில்லை. வயதான மூதாட்டி, தனது குடும்பத்தினருடன் வந்தார். அவருக்கு முன்பே வீல்சேர் புக் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் வந்தடைந்தபோது உதவி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், வீல் சேருக்கான அதிக தேவை மற்றும் பணியாளர் பற்றாக்குறை காரணமாக சேவையில் தாமதம் ஏற்பட்டது.
வயதான அந்த மூதாட்டி, குடும்பத்தினருடன் நடந்து செல்ல முடிவு செய்தார், அப்போது அவர் துரதிர்ஷ்டவசமாக விழுந்தார். இந்த சம்பவத்திற்கு ஏர் இந்தியா வருத்தம் தெரிவித்து, இத்தகைய தாமதங்கள் எதிர்காலத்தில் ஏற்படாதவாறு தங்கள் நடைமுறைகளை மறுபரிசீலனை செய்து வருவதாகக் கூறியது. வயதான பயணிகளுக்கு உதவி வழங்குவதில் ஏர் இந்தியா அர்ப்பணிப்புடன் செயல் படுகிறது.
இவ்வாறு ஏர் இந்தியா விமானம் தெரிவித்துள்ளது.