இதே வேலையாப் போச்சு; ஏர் இந்தியா விமானத்துக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல்!
இதே வேலையாப் போச்சு; ஏர் இந்தியா விமானத்துக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல்!
UPDATED : செப் 04, 2024 10:58 AM
ADDED : செப் 04, 2024 10:40 AM

புதுடில்லி; ஏர் இந்தியா விமானத்தில் குண்டு வெடிக்கப்போவதாக மிரட்டல் விடப்பட்டதால் புதுடில்லி விமான நிலையத்தில் பல மணி நேரம் பரபரப்பு நிலவியது.
டில்லியிலிருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று விசாகப்பட்டினம் செல்ல தயாராக இருந்தது. விமானத்தில் மொத்தம் 107 பயணிகள் இருந்தனர். விமானம் புறப்பட தயார் நிலையில் இருந்த போது விமான நிலையத்துக்கு தொலைபேசியில் மிரட்டல் வந்துள்ளது.
அதில் பேசிய மர்மநபர் ஒருவர், விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாகவும், சிறிது நேரத்தில் விமானம் வெடித்துச் சிதறும் என்றும் கூறிவிட்டு தொலைபேசியை துண்டித்து விட்டார். மிரட்டலால் அதிர்ந்த பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உடனடியாக அலர்ட் ஆகினர்.
பயணிகள் அனைவரும் உடனடியாக இறக்கி விடப்பட்டனர். அவர்களின் உடமைகள் முழுவதும் மீண்டும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன. பலகட்ட தீவிர சோதனைக்கு பின்னர் எந்த வெடிகுண்டும் கைப்பற்றப்படவில்லை.இதையடுத்து, தொலைபேசியில் வந்தது வெறும் மிரட்டல் என்பதை உணர்ந்து காவல்துறையில் முறைப்படி புகார் அளித்துள்ளனர்.
வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்ததும், பயணிகள் அனைவரும் விமானம் ஏறி புறப்பட்டுச் சென்றனர். கடந்த ஞாயிறு அன்று ஜபல்பூரில் இருந்து ஹைதராபாத் வந்த இண்டிகோ விமானத்துக்கும் இதேபோல், குண்டு மிரட்டல் விடப்பட்டது. ஆக.,22ல் மும்பையில் இருந்து திருவனந்தபுரம் வந்த ஏர் இந்தியா விமானத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. பல மணி நேர சோதனைக்கு பிறகே வெறும் புரளி என்பது உறுதியானது. எனினும், பயணிகள், விமான நிலைய அதிகாரிகள், பாதுகாப்பு படையினர் அனைவரும் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர்.