கேரள எம்பிக்கள் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் திடீர் கோளாறு; சென்னையில் பெரும் விபத்து தவிர்ப்பு
கேரள எம்பிக்கள் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் திடீர் கோளாறு; சென்னையில் பெரும் விபத்து தவிர்ப்பு
UPDATED : ஆக 11, 2025 11:09 AM
ADDED : ஆக 11, 2025 08:45 AM

சென்னை: திருவனந்தபுரத்தில் இருந்து கேரள எம்பிக்கள் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக, சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
திருநெல்வேலி காங்கிரஸ் எம்பி ராபர் ப்ரூஸ், கேரள எம்பிக்கள் கேசி வேணுகோபால், கொடிக்குனில் சுரேஷ், அதூர் பிரகாஷ், கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் திருவனந்தபுரத்தில் இருந்து ஏர் இந்தியா விமானத்தின் மூலம் டில்லி புறப்பட்டனர். அப்போது, விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கடுமையான காற்றழுத்தம் ஏற்பட்டது. இதனால், விமானத்தை சென்னைக்கு திருப்புவதாக விமானி அறிவித்தார்.
சுமார் 2 மணிநேரம் வானில் வட்டமடித்த நிலையில், விமானம் தரையிறக்க அனுமதி கேட்கப்பட்டது. விமானத்தை தரையிறக்க முயன்ற போது, அதே ஓடுபாதையில் மற்றொரு விமானம் இருந்ததாக அறிவிக்கப்பட்டது. பிறகு, சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி, விமானத்தை மீண்டும் மேலே எழுப்பி, பிறகு 2வது முயற்சியில் பாதுகாப்பாக தரையிறக்கினார். இதனால், விமானத்தில் இருந்த எம்பிக்கள் உள்ளிட்ட பயணிகள் பீதியடைந்தனர்.
இது குறித்து காங்கிரஸ் எம்பி கேசி. வேணுகோபால்வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில், 'பயங்கரமான அனுபவம். விமானியின் தைரியமான முடிவு பலரின் உயிரைக் காப்பாற்றியது,' எனக் குறிப்பிட்டுள்ளார்.