காத்மாண்டு சென்றுவர ரூ.13,300 போதும் ஏர் இந்தியா விமானத்தில் சலுகை விலை
காத்மாண்டு சென்றுவர ரூ.13,300 போதும் ஏர் இந்தியா விமானத்தில் சலுகை விலை
ADDED : செப் 04, 2025 02:47 AM

புதுடில்லி: தெற்காசியா, தென்கிழக்காசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணிக்கும் பயணியருக்காக ஏர் இந்தியா விமான நிறுவனம் கவர்ச்சிகரமான திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி, 13,300 ரூபாய் கட்டணத்தில் வெளிநாடுகளுக்கு சென்று திரும்ப முடியும்.
'ஏர் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் மொபைல் செயலி மூலம் நேரடியாக டிக்கெட் பதிவு செய்தால், கூடுதல் சலுகைகளும் கிடைக்கும்' என, ஏர் இந்தியா அறிவித்துள்ளது. இந்த சிறப்பு சலுகைக்கான டிக்கெட் முன்பதிவு வரும் 7ம் தேதி வரை மட்டுமே அனுமதிக்கப்படும். அந்த வகையில், டிக்கெட் முன்பதிவு செய்வோர் 2026, மார்ச், 31 வரை சலுகை விலையில் பறக்கலாம்.
ஏர் - இந்தியா அறிவித்த சலுகையின்படி டில்லியில் இருந்து நேபாளத்தின் காத்மாண்டுவுக்கு, 'பிரீமியம் எகனாமி' டிக்கெட் விலை 13,300 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை செலுத்தினால் போதும் காத்மாண்டுவுக்கு சென்றுவிட்டு மீண்டும் டில்லி திரும்பலாம்.
'பிசினஸ்' வகுப்பில் பயணிக்க 34,400 ரூபாய் செலுத்தினால் போதும். அதே போல் டில்லி - டாகாவுக்கு பிரீமியம் எகனாமி டிக்கெட் விலை 16,100 ரூபாய். இந்த வழித்தடத்திற்கான பிசினஸ் வகுப்பின் விலை 66,500 ரூபாய்.
மலேஷியாவின் கோலாலம்பூருக்கு டில்லியில் இருந்து செல்ல பிரீமியம் எகனாமி வகுப்புக்கு 23,700 ரூபாய் செலுத்தினால் போதும். அதே பிசினஸ் வகுப்பு எனில், 64,700 ரூபாய் கட்டணம்.
அதிகபட்சமாக டில்லியில் இருந்து மாலேவுக்கு செல்ல பிரீமியம் எகனாமி வகுப்பில் 39,400 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டில்லியில் இருந்து ஹாங்காங் சென்று வர பிசினஸ் வகுப்பில் 1,07,100 ரூபாய் கட்டணம்.
முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், இந்த சலுகை விலை டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக ஏர் - இந்தியா அறிவித்துள்ளது.