சான்றிதழ் இன்றி இயக்கப்பட்ட 'ஏர் இந்தியா' விமானங்கள்
சான்றிதழ் இன்றி இயக்கப்பட்ட 'ஏர் இந்தியா' விமானங்கள்
ADDED : டிச 03, 2025 05:46 AM

புதுடில்லி: 'ஏர் இந்தியா'வின், 'ஏர்பஸ் ஏ320' ரக பயணியர் விமானங்கள், உரிய தகுதிச் சான்று இன்றி கடந்த மாதம் பலமுறை இயக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை பாய்ந்துள்ள நிலையில், 'ஏர் இந்தியா' நிர்வாகம் மற்றும் டி.ஜி.சி.ஏ., அமைப்பு தனித்தனியே விசாரணை நடத்தி வருகின்றன.
'டாடா' குழுமத்தின், 'ஏர் இந்தியா' நிறுவனத்துக்கு சொந்தமான விமானம், குஜராத்தின் ஆமதாபாதில் கடந்த ஜூன் 12ம் தேதி கோர விபத்தை சந்தித்தது.
இதில், ஒரு பயணி தவிர விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த விபத்தைத் தொடர்ந்து, விமானங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியானது.
இதையடுத்து, அனைத்து விமான நிறுவனங்களின் பயணியர் விமானங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. பாதுகாப்பு விதிமுறைகளும் கடுமையாக்கப்பட்டன. இந்நிலையில், 'ஏர் இந்தியா' நிறுவனம் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
இந்நிறுவனத்துக்கு சொந்தமான, 'ஏர்பஸ் ஏ320' ரக பயணியர் விமானங்கள், கடந்த மாதத்தில் விமானப் பயண தகுதிச் சான்றிதழ் இன்றி இயக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
மாதாந்திர பதிவேடுகளை ஆய்வுசெய்தபோது, 'ஏர் இந்தியா' விமானம் பயணியர் பாதுகாப்பு விதிமீறலில் ஈடுபட்டது அதிர்ச்சியை அளித்துள்ளது.
இதையடுத்து, டி.ஜி.சி.ஏ., எனப்படும் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விசாரணையை துவக்கியுள்ளது.
மெத்தனமாக செயல்பட்ட அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்த, 'ஏர் இந்தியா' நிர்வாகம், இதுதொடர்பாக தனியாக விசாரணை நடத்தி வ ருகிறது.

