இதுக்கு ஒரு முடிவே இல்லையா? விமானங்களுக்கு தொடரும் வெடிகுண்டு மிரட்டல்
இதுக்கு ஒரு முடிவே இல்லையா? விமானங்களுக்கு தொடரும் வெடிகுண்டு மிரட்டல்
UPDATED : அக் 17, 2024 08:06 PM
ADDED : அக் 17, 2024 07:25 PM

புதுடில்லி: மும்பையில் இருந்து பிரிட்டன் தலைநகர் லண்டன் சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனுடன் சேர்த்து இன்று மட்டும் 10 விமானங்களுக்கு மிரட்டல் வந்துள்ளது பயணிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக விமானங்களுக்கு மிரட்டல் வந்த வண்ணம் உள்ளன. கடந்த 3 நாட்களில் மட்டும் 12 விமானங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. இது விமான நிறுவனங்களுக்கு பெரிய தலைவலியாக மாறி உள்ளது. பயணிகளும் அவதியடைந்து வருகின்றனர். இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதனிடையே, இன்றும் 10 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. மும்பையில் இருந்து காலை 7:05 மணிக்கு ஏர் இந்தியா விமானம் கிளம்பியது. இது லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தில், அந்நாட்டு நேரப்படி 12:05 மணிக்கு தரையிறங்க வேண்டும். ஆனால், லண்டனை நெருங்கிய நேரத்தில், விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாக மிரட்டல் வந்தது. இது குறித்து விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரும், மிரட்டல் குறித்து விமானத்தில் இருந்தவர்களிடம் தெரிவித்தார். இதனால், பயணிகள் மத்தியில் பீதியை உண்டாக்கியது. லண்டன் விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. பிறகு சோதனை செய்யப்பட்டது.
ஜெர்மனியில் இருந்து…
இன்று, ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரில் இருந்து மும்பை வந்த விஸ்தாரா விமானத்திற்கு சமூக வலைதளம் மூலம் மிரட்டல் வந்தது. இதனையடுத்து, அந்த விமானம் மும்பையில் தரையிறங்கியதும் தனியாக கொண்டு செல்லப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
அதேபோல், துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இருந்து மும்பை வந்த இண்டிகோ விமானத்திற்கும் மிரட்டல் விடுக்கப்பட்டது. அந்த விமானமும் தனியே கொண்டு செல்லப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
6 ஏர் இந்தியா விமானங்கள், விஸ்தாரா மற்றும் இண்டிகோ நிறுவனங்களுக்கு சொந்தமான தலா 2 விமானங்களுக்கும் மிரட்டல் வந்துள்ளது. இதன் மூலம் கடந்த 4 நாட்களில் 20க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு மிரட்டல் வந்துள்ளது பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உளவுத்துறை விசாரணை
இதனிடையே, இன்று விடுக்கப்பட்ட மிரட்டல் சம்பவங்கள் குறித்து மத்திய உளவுத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், மிரட்டல் விடுக்கப்பட்ட இணையதள முகவரியை கண்டுபிடித்து உள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து டில்லி வட்டாரங்கள் கூறுகையில், சமூக வலைதளம் மூலம் 3 வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இணையதள முகவரியை ஆய்வு செய்ததில் ஒன்று லண்டனில் இருந்தும், மற்றொன்று டச்லாந்தில் இருந்தும் வந்துள்ளது. இதற்கு வி.பி.என்., செயலியையும் பயன்படுத்தி உள்ளனர். இது குறித்து விசாரணை நடக்கிறது. மிரட்டல் குறித்து, 'எக்ஸ்' சமூக வலைதளம் நிறுவனத்திடம் கூடுதல் தகவல் கேட்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.