மும்பையில் ஓடுபாதையை விட்டு விலகிய 'ஏர் இந்தியா' விமானம்; இன்ஜின் சேதம்
மும்பையில் ஓடுபாதையை விட்டு விலகிய 'ஏர் இந்தியா' விமானம்; இன்ஜின் சேதம்
ADDED : ஜூலை 22, 2025 07:27 AM

மும்பை : கேரளாவின் கொச்சியில் இருந்து வந்த, 'ஏர் இந்தியா' விமானம், மும்பையில் தரையிறங்கும் போது, ஓடுபாதையை விட்டு விலகிச் சென்றது. விமானத்தின் இன்ஜின் பலத்த சேதமடைந்த நிலையில் , அதிர்ஷ்டவசமாக பயணியர் உயிர் தப்பினர்.
மஹாராஷ்டிராவின் மும்பை உள்ளிட்ட நகரங்களில், கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது; நேற்றும் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில், கேரளாவின் கொச்சியில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், நேற்று காலை 9:27 மணிக்கு, மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மஹாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.
ம ழை பெய்த நிலையில், ஓடுபாதையை விட்டு விமானம் விலகிச் சென்றது. இதில், விமானத்தின் டயர்கள் வெடித்தன. மேலும், ஓடுபாதையில் மோதி இன்ஜின் பலத்த சேதமடைந்தது. எனினும், விமானத்தை வி மானிகள் பத்திரமாக தரையிறக்கினர்.
அதிர்ஷ்டவசமாக, பயணியர் உயிர் தப்பினர். இந்த சம்பவத்தால், விமான நிலையத்தின் முதன்மை ஓடுபாதை சேதமடைந்தது. இதனால், இரண்டாம் நிலை ஓடுபாதை செயலில் உள்ளது.
இது குறித்து, ஏர் இந்தியா வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'கொச்சியில் இருந்து வந்த விமானம், மும்பையில் தரையிறங்கும் போது, கனமழையால் ஓடுபாதையை விட்டு விலகியது.
'எனினும், விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. இதில், யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. விமானம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதனால் விமான சேவைகள் பாதிக்கப்படவில்லை' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.