டில்லி - வாஷிங்டன் இடையிலான சேவை செப்., 1 முதல் நிறுத்த ஏர் - இந்தியா முடிவு
டில்லி - வாஷிங்டன் இடையிலான சேவை செப்., 1 முதல் நிறுத்த ஏர் - இந்தியா முடிவு
ADDED : ஆக 12, 2025 05:57 AM

புதுடில்லி: செயல்பாட்டு காரணிகள் காரணமாக செப்., 1ம் தேதி முதல் டில்லி மற்றும் அமெரிக்காவின் வாஷிங்டன் இடையிலான விமான சேவையை நிறுத்துவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
இது குறித்து ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நிறுவனத்தின் ஒட்டுமொத்த செயல்பாட்டு திறனை உறுதி செய்வதற்காக, செப்., 1 முதல், டில்லி - வாஷிங்டன் இடையிலான விமான சேவை நிறுத்தப் படுகிறது.
'போயிங் 787' விமானங்களின் மீதான மறுசீரமைப்பு நடவடிக்கை காரணமாக, 26 விமானங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதனால், விமானங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு இறுதிவரை இந்த நிலை நீடிக்கும்.
பாகிஸ்தான் வான்வெளி மூடப்பட்டுள்ளதால் தொலைதுாரம் இயக்கப்படும் விமான சேவைகள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், அமெரிக்காவின் நியூயார்க், நேவார்க், சிகாகோ, சான்பிரான்சிஸ்கோவில் இருந்து வாஷிங்டன் செல்லும் விமானங்கள் தொடர்ந்து இயக்கப் படும்.
கனடாவின் டொரன்டோ மற்றும் வான்கூவர் உட்பட வட அமெரிக்காவின் ஆறு இடங்களுக்கும், ஏர் இந்தியா தொடர்ந்து நேரடி விமானங்களை இயக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.