மீண்டும் அபாய நிலையில் காற்று மாசு கொரோனாவை விட மோசம் என்கிறார் நிபுணர்
மீண்டும் அபாய நிலையில் காற்று மாசு கொரோனாவை விட மோசம் என்கிறார் நிபுணர்
ADDED : டிச 18, 2024 08:50 PM

புதுடில்லி:தலைநகர் டில்லியில் அடர்பனி மூட்டம் சூழ்ந்து கடுங்குளிர் நிலவி வரும் சூழ்நிலையில், காற்று மாசு மீண்டும் அபாயகரமான நிலைக்குச் சென்றுள்ளது. கொரோனா தொற்று பரவலை விட, டில்லியில் ஏற்பட்டுள்ள நச்சுக் காற்று மக்களின் உடல்நலனில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்த பாதுகாப்பான வரம்பை விட, டில்லியில் நேற்று காற்றின் தரம் 35 மடங்கு அதிகமாக அபாயகரமான நிலையில் இருந்தது. டில்லி மக்கள் மூச்சுத் திணறல், கண் எரிச்சல், தொண்டையில் அரிப்பு ஆகியவற்றால் அவதிப்பட்டனர். காற்றின் தரக்குறியீட்டு நேற்று காலை 550ஐ தாண்டியது. மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்தனர்.
குழந்தைகள் மற்றும் முதியோர் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரித்துள்ள நிபுணர்கள், 'கொரோனா தொற்று பரவல் காலத்தை விட தற்போது டில்லியில் நச்சுக் காற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டில்லி மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வெளியில் நடமாடும் அனைவரும் முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும்' என அறிவுறுத்தியுள்ளனர்.
ஆண்டு தோறும் குளிர்காலத்தில் டில்லி மற்றும் அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகியவற்ரில் காற்று மாசு அதிகரிக்கிறது.
வாகனப் புகை, பயிர்க் கழிவுகளை எரித்தல், கட்டுமானக் கழிவுகள் மற்றும் குளிர்காய்வதற்காக மரக்கட்டைகளை எரித்தல் ஆகியவற்றால் காற்று மாசு அதிகரிக்கிறது.
காற்று மாசைக் கட்டுப்படுத்த டில்லி அரசு கடுமையான பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு 'ஆன் - லைன்' வாயிலாக வகுப்புகள் நடத்தப்படுகின்றன. கட்டுமான மற்றும் கட்டட இடிப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கனரக வாகனங்கள் மற்றும் அண்டை மாநிலங்களின் பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் பஸ்கள் ஆகியவை டில்லிக்குள் நுழையவும் தடை நீடிக்கிறது.
அண்டை மாநிலங்கள்
பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களும் டில்லியைப் போலவே கடுங்குளிரில் சிக்கித் தவிக்கின்றன. பஞ்சாபின் பரித்கோட்டில் வெப்பநிலை நேற்று 0.9 டிகிரி செல்ஷியஸாகவும், மாநிலத்தின் மிகவும் குளிரான இடமாகவும் பதிவாகி இருந்தது. அதேபோல பதான்கோட், பதிண்டா, குர்தாஸ்பூர், அமிர்தசரஸ், லூதியானா, பாட்டியாலா ஆகிய நகரங்களிலும் கடுங்குளிர் நிலவுகிறது.
ஹரியானாவில் ஹிசார், சிர்சா, கர்னால், ரோஹ்தக், குருகிராம் மற்றும் அம்பாலா ஆகிய நகரங்களிலும் கடுங்குளிர் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இரு மாநிலங்களின் பொதுத் தலைநகரான சண்டிகரில் வெப்பநிலை நேற்று 6.6 டிகிரி செல்ஷியஸ் பதிவாகி, அடர் பனிமூட்டம் நாள் முழுதும் சூழ்ந்திருந்தது.