டில்லியில் அபாய அளவை எட்டியது காற்று மாசு பள்ளிகள் மூடல்; கட்டுமான பணிகளுக்கு தடை
டில்லியில் அபாய அளவை எட்டியது காற்று மாசு பள்ளிகள் மூடல்; கட்டுமான பணிகளுக்கு தடை
ADDED : நவ 19, 2024 02:24 AM

புதுடில்லி, டில்லியில் காற்றின் தரக் குறியீடு, 484 என்ற மிகத் தீவிரம் பிளஸ் என்ற நிலையை எட்டியுள்ளது. கிட்டத்தட்ட நச்சுக்காற்றை மக்கள் சுவாசிக்கின்றனர். இதனால், பெரும் சுகாதார பாதிப்புகளை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
காற்று மாசை கட்டுப்படுத்த பல புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டும், பெரிய அளவில் பலனளிக்கவில்லை.
உலக அளவில் மிகவும் மோசமான காற்று மாசுள்ள நகரங்களில், நம் அண்டை நாடான பாகிஸ்தானின் லாகூருக்கு அடுத்ததாக, நம் நாட்டின் தலைநகர் டில்லி இடம்பெற்றுள்ளது.
லாகூரில் காற்றின் தரக் குறியீடு, 1,000 என்ற மிகவும் அபாயகரமான நிலையை ஏற்கனவே எட்டியுள்ளது. டில்லியில், காற்றின் தரம் கடந்த சில மாதங்களாகவே மிகத் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அளவிலேயே தொடர்ந்து இருந்து வருகிறது.
வரைமுறை
இந்நிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று, 484 என்ற அளவுடன், மிகத் தீவிரம் பிளஸ் என்ற அளவை எட்டியுள்ளது.
அதாவது, காற்றின் தரக் குறியீடு 201 - 300 வரை மோசம், 301 - 400 வரை மிக மோசம், 401 - 450 வரை மிகத் தீவிரம், 450க்கு மேல் இருந்தால், மிகத் தீவிரம் பிளஸ் எனப்படும் சுவாசிப்பதற்கு லாயக்கற்றது என்பதாகும்.
டில்லியில் நேற்று முன்தினம் மதியம், 441 என்ற அளவில் இருந்த காற்று தரக் குறியீடு, மாலை, 457 ஆக மோசமடைந்தது. இந்நிலையில், நேற்று காலை, 484 என்ற அளவுக்கு மோசமானது.
காற்றின் தரத்தைப் பொறுத்து, அதைக் கட்டுப்படுத்த சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக, மத்திய அரசின் காற்று தர கண்காணிப்பு அமைப்பு, சில வரைமுறைகளை வகுத்துள்ளது.
அதன்படி, ஜி.ஆர்.ஏ.பி., எனப்படும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின், நான்காவது நிலையைப் பின்பற்ற உத்தரவிடப்பட்டது.
இதன்படி, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளைத் தவிர, மற்ற வகுப்புகளுக்கு ஆன்லைன் வாயிலாக பாடம் எடுக்க உத்தரவிடப்பட்டது. சாலைகள், பாலங்கள் உட்பட அனைத்து அரசு உட்கட்டமைப்பு வசதி கட்டுமானங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும், அத்தியாவசியப் பொருட்களை ஏற்றி வரும் டிரக்குகள் தவிர மற்ற டிரக்குகள் டில்லிக்குள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வாகனங்களுக்கு தடை
பசுமை எரிபொருளால் இயக்கப்படும் வாகனங்களைத் தவிர, மற்ற வெளிமாநில பதிவுள்ள வாகனங்கள் டில்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
டில்லியில் பதிவு செய்யப்பட்ட, 15 ஆண்டு பழமையான வாகனங்கள், டீசல் வாகனங்கள் இயக்கத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாடுகள் நேற்று காலையில் இருந்து அமலுக்கு வந்தன. ஆனாலும், டில்லியில், காற்றின் தரம் மிகவும் மோசமாகவே இருந்தது.
டில்லி சப்தர்ஜங் விமான நிலையத்தில், 500 அடி துாரத்தில் உள்ளவை கண்ணுக்கு தெரியாத அளவுக்கு புகை மண்டலமாக இருந்தது. டில்லி முழுதும் இதுபோலவே புகையால் சூழப்பட்டிருந்தது.
குளிர்காலம் துவங்கியது நிலைமையை மேலும் மோசமாக்கி உள்ளது.
நேற்று குறைந்தபட்ச வெப்பநிலை, 16.2 டிகிரி செல்ஷியசாக இருந்தது. இது இயல்பைவிட, 3.2 டிகிரி குறைவாகும். அதிகபட்ச வெப்பநிலை, 28 டிகிரி செல்ஷியசாக இருந்தது.
கிட்டத்தட்ட காற்றின் தரம் நச்சு நிலையை எட்டியதால், மக்கள் முகக்கவசம் அணிந்தே சென்றனர்.
அலுவலகங்களிலும், 50 சதவீதம் பேர் வீட்டில் இருந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், சாலைகளில் மக்கள் புழக்கம் குறைந்தது.