தமிழகம், கேரளா, கர்நாடகாவில் காற்றின் தரம் சூப்பர்!; டில்லி, வட மாநிலங்களில் நிலைமை படுமோசம்
தமிழகம், கேரளா, கர்நாடகாவில் காற்றின் தரம் சூப்பர்!; டில்லி, வட மாநிலங்களில் நிலைமை படுமோசம்
ADDED : நவ 26, 2025 04:18 AM

தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற தென் மாநிலங்களில் காற்றின் தரம் நல்ல நிலையில் இருப்பதாகவும், டில்லி, பஞ்சாப் உட்பட வட மாநிலங்களில், நிலைமை படுமோசமாக இருப்பதாகவும், காற்றின் தரம் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
டில்லியில் காற்றின் தரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. எங்கு பார்த்தாலும் புகை மண்டலமாக இருப்பதால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. காற்று மாசை குறைக்க, டில்லியில் ஆளும் பா.ஜ., அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், 'கிரியா' எனப்படும் 'துாய்மையான காற்று மற்றும் ஆற்றலுக்கான ஆய்வு மையம்' நடத்திய ஆய்வில் உலக சுகாதார மையம் நிர்ணயித்த காற்றின் தரக்குறியீடு அளவு, நம் நாட்டின் எந்தவொரு மாவட்டத்திலும் இல்லை என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.
நம்பிக்கை
'கிரியா' வெளியிட்ட ஆய்வறிக்கை:
உலக சுகாதார மையம் நிர்ணயித்த காற்றின் தரக்குறியீடு அளவான பி.எம்., 2.5 அதாவது காற்றில் இருக்கும் மாசு, ஓராண்டுக்கு ௧ கியூபிக் மீட்டருக்கு ஐந்து மைக்ரோ கிராமுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
அதன் அடிப்படையில் உயர் தெளிவுத்திறன் கொண்ட செயற்கைக்கோள் மூலம், நாடு முழுதும் மொத்தம் 749 மாவட்டங்களில் காற்றின் தரம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதில், 447 மாவட்டங்களில் காற்றின் தரக்குறியீடு, ஒரு கியூபிக் மீட்டருக்கு 40 மைக்ரோ கிராம் என்ற அளவு பதிவாகி உள்ளது.
மொத்தம் 33 மாநிலங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், டில்லியில் தான் காற்றின் தரம் மிக மோசமான அளவில் உள்ளது. ஓராண்டில், ஒரு கியூபிக் மீட்டருக்கு 101 மைக்ரோ கிராம் அளவுக்கு மாசு பதிவாகியுள்ளது. இது தேசிய வரம்பை விட 2.5 மடங்கும், உலக சுகாதார மையத்தின் வரம்பை விட 20 மடங்கும் அதிகம்.
டில்லிக்கு அடுத்தபடியாக, சண்டிகரில் காற்றின் தரம் மிக மோசமாக உள்ளது. அங்கு 2024 மார்ச் - 2025 பிப்., வரை, காற்றின் தரக்குறியீடு ஒரு கியூபிக் மீட்டருக்கு, 70 மைக்ரோ கிராம் என, பதிவாகி உள்ளது.
ஹரியானாவில் 63; திரிபுராவில் 62; அசாமில் 60; பீஹாரில் 59; மேற்கு வங்கத்தில் 57; பஞ்சாபில் 56; மேகாலயாவில் 53; நாகாலாந்தில் 52 மைக்ரோ கிராம் என்ற அளவில் காற்று மாசு அளவு பதிவாகி உள்ளது. இந்த அளவும், நம் தேசிய சுற்றுப்புற காற்று தரநிலை அங்கீகரித்த ஒரு கியூபிக் மீட்டருக்கு 40 மைக்ரோ கிராம் என்ற அளவை விட அதிகம்.
தரைவழி கண்காணிப்பு தரவுகள் இல்லாத காரணத்தால் லடாக், அந்தமான் - நிக்கோபார், லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேசங்கள் இந்த ஆய்வில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. தென் மாநிலங்கள் மட்டும் தான் ஓரளவுக்கு தற்போது நம்பிக்கை தருகின்றன.
புதுச்சேரியில் மிக குறைந்த அளவே காற்று மாசடைந்துள்ளது. அங்கு ஒரு கியூபிக் மீட்டருக்கு, 25 மைக்ரோ கிராம் என்ற அளவு பதிவாகி உள்ளது. அடுத்தபடியாக குறைந்த அளவு மாசு கொண்ட தென் மாநிலங்களில் தமிழகம், கர்நாடகா, தெலுங்கானா, கேரளா, ஆந்திரா உள்ளன.
காற்றுவெளி பகுதி அதே போல் காற்று மாசு மற்ற பகுதிகளில் எப்படி பரவுகிறது, எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டது. இதற்காக வளிமண்டலத்தின் ஒரு பகுதியான காற்றுவெளி பற்றி ஆய்வு செய்தோம். ஏனெனில், காற்றுவெளியில் படரும் மாசு, மாநிலங்களை கடந்து பிற பகுதிகளிலும் படரும் என்பதால், இந்த ஆய்வும் மிகவும் முக்கியத்துவம் பெற்றது.
அந்த வகையில் இந்தோ - கங்கை காற்றுவெளி பகுதி நாட்டிலேயே மிக மோசமான அளவுக்கு மாசடைந்த பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களின் காற்றுவெளி பகுதியும் கவலை அளிக்கும் வகையில் இருக்கிறது.
நாட்டின் பிற காற்றுவெளி பகுதிகளில் மாசு அதிகரித்தாலும், மழைக் காலங்களில் அந்த அளவு கட்டுக்குள் வந்து விடுகிறது. அதன்பின் மீண்டும் பழைய மாசு நிலைக்கே சென்று விடுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
காற்று மாசு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டுமெனில், உமிழ்வு குறைப்பு திட்டங்கள், கூட்டு கண்காணிப்பு முறைகள் மற்றும் பொறுப்புக்கூறல் வழிமுறைகளை பின்பற்றுவது அவசியம் என, ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், தேசிய துாய்மை காற்று திட்டத்தின் கீழ், காற்றுவெளியில் பரவும் மாசுபாட்டு அளவை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் அண்டை மாநிலங்கள், மாவட்டங்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து பகுதியிலும் மாசு! நகரத்தில் ஏற்படும் மாசு அல்லது குளிர்கால பனிமூட்டம் என்ற குறுகிய பார்வையில், இனி காற்று மாசை பார்க்கக் கூடாது. ஏனெனில் சமீபத்திய ஆய்வு, அதற்கெல்லாம் அப்பாற்பட்டு இருக்கிறது. அதாவது, ஆண்டு முழுதுமே காற்றின் தரம் மோசமான நிலையில் இருப்பதை சுட்டிக்காட்டுகிறது. இதனால், தேசத்தின் ஒவ்வொரு பகுதியிலும் பாதிப்பு ஏற்படுகிறது. -- மனோஜ் குமார், 'கிரியா' ஆய்வாளர்
- நமது சிறப்பு நிருபர் -:

