மேற்காசிய வான்வெளியை தவிர்க்க விமான நிறுவனங்களுக்கு அறிவுரை
மேற்காசிய வான்வெளியை தவிர்க்க விமான நிறுவனங்களுக்கு அறிவுரை
ADDED : மார் 21, 2026 02:46 AM
புதுடில்லி: 'மேற்காசியாவில் நடக்கும் மோதலால், அப்பகுதியில் உள்ள வான்வெளிகளை பயன்படுத்த வேண்டாம்' என, டி.ஜி.சி.ஏ., எனப்படும் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.
மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகின்றன.
ஈரானும் பதிலடி தருவதால் போர் பதற்றம் நிலவும் அப்பிராந்தியத்தில், ஏவுகணை, ஆயுதம் ஏந்திய ட்ரோன்கள், வான் பாதுகாப்பு ஏவுகணைகள் பறந்தபடி உள்ளதால், பாதுகாப்பு ஆபத்துகள் அதிகரித்துள்ளன.
ஐரோப்பா, வட அமெரிக்காவுடன் நம் நாட்டை இணைக்கும் முக்கிய விமான பாதையாக மேற்காசியா இருப்பதால் விமான சேவை பாதிக்கப்பட்டு உள்ளது.
முன்னெச்சரிக்கையாக மாற்று வழித்தடங்களை தயார் செய்யும்படியும், மேற்காசிய வான்வெளியை தவிர்க்கும்படியும் விமான நிறுவனங்களுக்கு டி.ஜி.சி.ஏ., அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில், மேற்காசியாவில் அதிக சேவைகளை வழங்கும் ஏர் இந்தியா, ஈரான் மற்றும் ஈராக் வான்வெளிகளை தவிர்த்து மாற்று பாதையில் விமானங்களை இயக்க துவங்கி உள்ளது.
இதனால், பயண நேரம் அதிகரித்துள்ளது. இதை ஈடுசெய்ய விமான பணியாளர் பணி நேர விதியில் தற்காலிக தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
